தமிழக அரசியல் களம் தற்போது கரூரை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம், திமுகவின் முப்பெரும் விழா இங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதே கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து, திமுகவின் கோட்டையாக கருதப்படும் இடத்திலேயே அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், இன்று ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவர் விஜய், கரூரில் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
திமுக மற்றும் அதிமுகவின் கூட்டங்களை விட, விஜய்யின் கூட்டம் மிகப்பெரிய மாஸை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘தளபதி’ என்று வர்ணிக்கப்படும் செந்தில் பாலாஜியின் கோட்டைக்குள் விஜய் நுழையும் ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், விஜய் இன்று அவரை பற்றி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செந்தில் பாலாஜியின் செல்வாக்கால் கரூரில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கூறப்படும் நிலையில், விஜய் அங்கே என்ன செய்யப் போகிறார் என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜியின் அரசியல் மற்றும் அவர் சார்ந்த வழக்குகள் குறித்து விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் அரசியல் விமர்சனங்கள் மட்டுமன்றி, கரூரில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களது பிரச்சனைகளைக் கேட்பார் என்றும் கூறப்படுகிறது.
கரூரில் தனது நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட பிறகு, விஜய் நாமக்கல் செல்ல இருக்கிறார். நாமக்கல் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது ‘கிட்னி திருட்டு’ விவகாரம்தான். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே அவர் பேசி இருந்தாலும், இன்று அவர் பேசவிருக்கும் இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை விஜய் முன்வைத்தால், அது நாட்டுக்கே பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த கோரிக்கை மூலம், மத்திய அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து, இந்த விவகாரத்தில் ஒரு நீதி கிடைக்க செய்ய விஜய் முயற்சிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கிட்னி திருட்டு விவகாரத்தை விசாரணை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு முறைகேட்டை விசாரிக்க வேண்டாம் என்று எந்த அரசாவது நீதிமன்றம் செல்லுமா? என்ற கேள்வி மக்கள் முன் எழுந்துள்ளது. இந்த செய்தியை பெரும்பாலான பெரிய ஊடகங்கள் மறைத்து விட்டாலும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவரும் நிலையில் இந்த விஷயத்தை விஜய் இன்று பேசினால் அது காட்டுதீ போல பற்றிக்கொண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இரண்டு மக்கள் சந்திப்புகளை மட்டுமே நடத்திய விஜய், பெரும்பாலான அமைச்சர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளார். இந்த நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூருக்குள் இன்று அவர் நுழைய இருப்பது, திமுக மற்றும் அதன் தலைவர்களுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இன்றைய கரூர் நிகழ்வு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
