எந்த முட்டாளாவது ஒரு பொருளை பாதி விலைக்கு விற்பானா? போட்டி போட்டு வழங்கப்படும் பண்டிகை கால சலுகை விலைகள்.. உண்மையிலேயே சலுகையா? உங்கள் ஆசையை தூண்டி ஏமாற்றும் வேலையா?

முன்னணி சர்வதேச நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை திருவிழாக்கள் தொடங்கிவிட்டன. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மக்கள் பொருட்களை வாங்க தயாராக உள்ளனர். ஆனால், இந்த கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் சில வணிக…

offer

முன்னணி சர்வதேச நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை திருவிழாக்கள் தொடங்கிவிட்டன. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மக்கள் பொருட்களை வாங்க தயாராக உள்ளனர். ஆனால், இந்த கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் சில வணிக ரகசியங்களை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள், இந்த விற்பனை நாட்களில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மிகவும் நியாயமானவை என்று நம்புகிறார்கள். ஆனால் இதற்கு பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

ஜிஎஸ்டி மற்றும் வரி சலுகைகள்: முன்னணி நிறுவனங்கள், செப்டம்பர் மாதம் முடிவடையும் காலாண்டுக்கு முன் அதிக விற்பனையை பதிவு செய்ய முனைகின்றன. இதன்மூலம், நிதி ஆண்டின் இறுதியில், வருமான வரி மற்றும் பிற வரிகளில் சலுகைகளை பெற முடியும்.

இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலம் அதாவது ஆயுதபூஜை, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை கொண்டாட்டங்கள் என்பதால், மக்கள் புதிய பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதை அடிப்படையாக கொண்டே இந்த விற்பனை நிகழ்வுகள் திட்டமிடப்படுகின்றன.

இந்த விற்பனையின் முக்கிய நோக்கம், அவசியமற்ற பொருட்களை வாங்குவதற்கு உங்களை தூண்டுவதாகும். ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் என்ற சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போல் உங்கள் ஆசையை தூண்டி தேவையில்லாத பொருட்களை சலுகை என்ற பெயரில் உங்கள் தலையில் கட்டுவதற்கு பெயர் தான் இந்த விற்பனை திருவிழா.

உதாரணமாக, ஐபோன் 16 மாடலுக்கு 20% தள்ளுபடி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தள்ளுபடியைக் கண்டதும், உங்களுக்கு அந்த ஐபோன் உண்மையிலேயே தேவைதானா என்று யோசிக்காமல், கிரெடிட் கார்டை பயன்படுத்தி அதை வாங்கிவிடுவீர்கள். உங்கள் ஆசையை இன்னும் அதிகரிக்க, ‘இன்னும் 3 மணி நேரத்தில் ஆஃபர் முடியும்’, ‘அனைத்து ஸ்டாக்கும் விற்றுத் தீர்ந்தது’ போன்ற வாசகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆன்லைன் தளங்கள், ஒரு பொருளின் உண்மையான விலையை உயர்த்தி காட்டி, பின்னர் அதை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றன. உதாரணமாக, ஒரு தொலைக்காட்சியின் உண்மையான விலை ₹50,000 எனில், அதை ₹70,000 என்று மாற்றி, பின்னர் 20% தள்ளுபடி என்று கூறி ₹56,000-க்கு விற்பனை செய்வார்கள். உண்மையில் நீங்கள் சலுகை விலையில் வாங்கவில்லை, அதிக விலை கொடுத்துதான் ஏமாறுகிறீர்கள். இந்த தந்திரத்தை கண்டறிய, கடந்த சில மாதங்களில் அந்த பொருளின் சராசரி விலை என்ன என்பதை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது. சில ஆன்லைன் கருவிகள் இதற்கு உதவுகின்றன.

மேலும் இந்த விழாக்கால விற்பனைகளின் போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். தள்ளுபடி, கேஷ்பேக், இஎம்ஐ போன்ற வசதிகள் மூலம் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்கிறது. ஆனால், இதனுள் மறைந்திருக்கும் processing fee என்ற செயலாக்கக் கட்டணம் மற்றும் நிலுவைத் தொகை அபராத கட்டணம் போன்றவை உங்களை நிதி நெருக்கடிக்கு இட்டு செல்லும்.

பொருட்களுடன் கூடுதலாக வழங்கப்படும் ‘பாதுகாப்புத் திட்டங்கள்’ அல்லது ‘இன்சூரன்ஸ்’ வசதிகள் பெரும்பாலும் அவசியமற்றவை. மேலும், ‘புதுப்பிக்கப்பட்ட பொருட்கள்’ (refurbished products) என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள், மீண்டும் சரிசெய்யப்பட்ட பழைய பொருட்களாக இருக்கலாம். இவற்றை வாங்குவதற்கு முன், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாகப் படிப்பது அவசியம்.

இந்த விற்பனை திருவிழாக்களை நீங்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உங்களுக்கு உண்மையிலேயே தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். விளம்பரங்களில் உள்ள கவர்ச்சிக்கு அடிமையாகாதீர்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அதன் முந்தைய விலையை சரிபார்க்கவும். ஒரு பொருள் நமக்கு தேவைதானா? என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்து அந்த பொருள் உண்மையில் தேவை என்றால் மட்டும் வாங்குங்கள். அதுவும் ஆன்லைன் திருவிழா விலையை மற்ற ஷோரூம் விலையுடன் ஒப்பிட்டு எதில் குறைவோ அதில் வாங்குங்கள். பெரும்பாலும் கிரெடிட் கார்டில், தவணையில் வாங்க வேண்டாம். எந்த பொருளின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறதோ, அந்த பொருளை மட்டும் தான் தவணையில் வழங்குவார்கள். யாராவது இதுவரை தங்கத்தை தவணையில் வழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏனெனில் தங்கத்தின் மதிப்பு எப்போதுமே குறையாது, உயர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தங்கத்தை யாரும் தவணையில் தரமாட்டார்கள்.

இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களாக இருப்பதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக முடிவெடுத்து செலவு செய்யுங்கள்!