இந்திய விமானப் படையின் வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சகாப்தம் இன்று முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானமான மிக்-21 (MiG-21) இன்று அதாவது செப்டம்பர் 26 அன்று இறுதியாக வானில் கர்ஜித்து ஓய்வு பெறுகிறது. கடந்த 62 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் பங்காற்றிய இந்த புகழ்பெற்ற ‘போர் குதிரை’க்கு, அது தன் பயணத்தை தொடங்கிய சண்டிகர் விமானப்படை தளத்தில், மரியாதை வழங்கப்பட்டு விடை பெற்றது.
மிக்-21 விமானம் விடைபெறும் இந்த உணர்வுபூர்வமான விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். இவருடன் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, விமான படைத் தளபதி ஏ.பி. சிங், மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
மிக்-21 விமானம் 1960களின் முற்பகுதியில் இந்திய விமான படையில் இணைக்கப்பட்டதன் மூலம், இந்தியாவை ஜெட் யுகத்திற்குள் சென்றது எனலாம். இது இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தை விட வேகமாகச் செல்லும்) போர் மற்றும் இடைமறிக்கும் விமானம் ஆகும்.
1965 மற்றும் 1971 போர்கள், மற்றும் 1999 கார்கில் போர் உள்ளிட்ட பல மோதல்களில் இதன் துணிச்சலை நிரூபித்துள்ளது. தலைமுறை தலைமுறையான விமான ஓட்டிகளுக்கு பயிற்சியளிக்கும் களமாகவும் இது விளங்கியது. விமானப் படையின் வலிமை மற்றும் திறமையின் பிரதிநிதியாகவே மிக்-21 பார்க்கப்பட்டது. போர்ப் பணிகளைத் தவிர, உளவு பார்க்கும் பணிகள், வான் பாதுகாப்பு ரோந்து மற்றும் சில முக்கிய பயிற்சிகளுக்கும் இது மிகவும் முக்கியமானதாக இருந்தது.
மிக்-21 விமானத்தை இறுதி முறையாக இயக்கும் விமானிகளில், விமான படையின் ஒரு சில பெண் போர் விமானிகளில் ஒருவரான ஸ்குவாட்ரன் லீடர் பிரியா சர்மாவும் இடம்பெற்றார். இதன் மூலம், மிக்-21 விமானத்தை இயக்கிய கடைசி பெண் போர் விமானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மிக்-21 ஓய்வு விழாவில் பங்கேற்ற போர் வீரர்கள் மிக்-21 விமானத்துடனான தங்கள் அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற கேப்டன் அனுபம் பானர்ஜி கூறுகையில், “இன்று ஒரு கலவையான உணர்ச்சிகளை கொண்ட ஒரு நாள். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு மகத்தான சேவை செய்த ஒரு வீரம் மிக்க போர் விமானம் இன்று ஓய்வு பெறுகிறது. அதன் சேவைக்கு பாராட்டுகள். அதே நேரத்தில், எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரும். இந்திய விமானப் படை அடுத்த தலைமுறை நவீனமயமாக்கலுக்கு செல்வதில் மகிழ்ச்சி, ஆனால் ஒரு பழைய, நம்பகமான நண்பனுக்கு விடைபெறுவது எப்போதும் கடினம்,” என்று அவர் கூறினார்.
1960 களின் முற்பகுதியில், சீனா மற்றும் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்த போது, விமானப்படைக்கு அதிக வேகம், சக்தி மற்றும் புதிய விமானங்கள் தேவைப்பட்டன. அந்த நேரத்தில் இந்தியா சோவிய யூனியனின் சூப்பர்சோனிக் ஜெட் ஆன மிக்-21-ஐத் தேர்ந்தெடுத்தது.
மிக்-21 ஓய்வு பெற்ற நிலையில், ரஃபேல்கள், சுகோய்கள் மற்றும் தேஜஸ் மார்க்-1ஏ போன்ற நவீன விமானங்கள் இப்போது இந்திய ராணுவத்தில் பொறுப்பேற்கின்றன. மிக்-21 விடைபெற்றாலும், அதன் மரபு எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
