உறுதியான மனதின் முன்னால் எந்த நோயும் நிற்காது என்பதை, பிரிட்டனை சேர்ந்த பவுல் வெல்ஷ்-டால்டன் என்பவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். உயிருக்கு ஆபத்தான மூளை கட்டியை அகற்ற, அவர் விழித்திருக்கும்போதே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது கிட்டார் வாசித்து, மருத்துவர்கள் மற்றும் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் டெவன் நகரில் வசிக்கும் பவுல், ஒரு நாள் தன் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும்போது, சமையலறையில் திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடலின் வலது பகுதி மரத்து போனதால், அவருக்கு பக்கவாதம்’ ஏற்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் பயந்தனர். ஆனால், அவசர சோதனைகளுக்கு பிறகு, மருத்துவர்கள் அவருக்கு தீவிரமான மூளைக் கட்டி இருப்பதாக கண்டறிந்தனர். இந்த கட்டி ஏற்கனவே மூன்றாம் நிலையில் இருந்ததால், அது `முற்றிய புற்றுநோய்’ என வகைப்படுத்தப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாகக் கிட்டார் வாசித்து வரும் பவுலுக்கு இசை மீது தீராத காதல் உண்டு. அறுவை சிகிச்சையின்போது இசை அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார். பிளைமவுத்தில் உள்ள டெரிஃபோர்ட் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குழுவினர், அவரது விருப்பத்தை புரிந்து கொண்டு அதற்கு ஆதரவளித்தனர்.
அந்த கட்டியின் பெரும்பகுதியை அகற்ற ஐந்து மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது, பவுல் விழித்திருந்தார். உலகின் மிகச்சிறந்த இசைக்குழுக்களின் பாடல்களை அவர் கிட்டாரில் வாசித்தார். பவுல் கிட்டார் வாசிக்கும்போது, சில மூளை பகுதிகளில் மருத்துவர்கள் தொடும்போது அவரது கைகள் நின்றுபோகும். இதன் மூலம், மூளையின் முக்கிய மோட்டார் இயக்கங்கள் மற்றும் பேச்சு தொடர்பான பகுதிகளை பாதுகாக்க, எந்தெந்த பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதை அறுவை சிகிச்சை நிபுணர்கள் புரிந்துகொண்டனர். இந்த அறுவை சிகிச்சையின் மூலம், மருத்துவர்களால் 98% கட்டியை வெற்றிகரமாக அகற்ற முடிந்தது.
பவுலின் மனைவி டிஃப் மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகள் இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு அருகே பக்கபலமாக நின்றனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, பவுல் ஆறு வாரங்கள் கதிரியக்க சிகிச்சையும், ஒன்பது மாதங்களுக்குக் கீமோதெரபியும் பெற உள்ளார். இந்த கட்டி குணப்படுத்த முடியாதது என்றாலும், இந்த சிகிச்சைகள் அவரது வாழ்க்கை காலத்தை கணிசமாக நீட்டிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
