அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் வருகை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாணவர் வரத்து மூலமாக இருந்த இந்தியாவில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 45% சரிந்துள்ளது. இது அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க அரசின் புதிய புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 3,13,000 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 19% குறைவாகும், மேலும் 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான மிக குறைந்த அளவாகும். இந்த சரிவு தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக நீடிக்கிறது.
அமெரிக்காவின் சர்வதேச மாணவர்களில் பெரும்பாலானவர்களை வழங்கும் ஆசிய கண்டத்தில், மாணவர்களின் வருகை 24% குறைந்துள்ளது. சீனாவிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 12% சரிந்துள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சியாக, இந்தியாவிலிருந்து மாணவர்களின் வருகை 45% குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை அமெரிக்காவின் மிகப்பெரிய மாணவர் வரத்து மூலமாக இருந்த இந்தியா, இப்போது கிட்டத்தட்ட பாதியாகச் சரிந்துள்ளது.
ஜப்பான், வியட்நாம், மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை முறையே 12% மற்றும் 33% வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், மேற்கு ஐரோப்பாவிலிருந்து வரும் மாணவர் வருகையில் 1%-க்கும் குறைவான சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.
இந்த சரிவுக்கு காரணமாக பல ஆய்வாளர்கள் வாஷிங்டனின் புதிய குடியேற்ற கொள்கைகளை சுட்டிக்காட்டுகின்றனர். அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம், அமெரிக்க வெளியுறவு துறை மாணவர் விசா நேர்காணல்களை நிறுத்தியது. புதிய சரிபார்ப்பு நடைமுறைகளின்படி, விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக பதிவுகள் விரிவாக ஆராயப்படுகின்றன.
மிக முக்கியமாக, H1B விசா திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விசாவுக்கான கட்டணம் $215 முதல் $5,000 என்ற நிலையிலிருந்து, இப்போது $1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர் வருகை குறைவது, அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். 2023-24 நிதியாண்டில், சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவிற்கு சுமார் $44 பில்லியன் வருவாயை ஈட்டித் தந்ததுடன், கிட்டத்தட்ட 400,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளனர்.
சர்வதேச கல்வியாளர்களின் அமைப்பான NAFSA, இந்த வீழ்ச்சியால் இந்த இலையுதிர் காலத்தில் மட்டும் $7 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்த புதிய கொள்கைகள், அமெரிக்காவின் உயர்கல்வி அமைப்பின் உலகளாவிய கவர்ச்சியைப் பாதிக்கும் என்று பல்கலைக்கழகங்களும் கவலை தெரிவித்துள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
