KPY பாலா அமெரிக்க ஏஜன்டாகவோ, சீனா ஏஜன்டாகவோ இருக்க வாய்ப்பில்லை.. ஆனால் அவரிடம் ஒரு சிக்கல் இருக்குது.. 100 ரூபாய் தானம் செஞ்சிட்டு 1000 ரூபாய் செஞ்சதா சொன்னா சில சிக்கல் வரும்.. பாலாவுக்கும் அதே சிக்கல் தான்..!

KPY பாலாவின் விவகாரம் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நிதி உதவி பெறுகிறார், அரசாங்கத்தையே சீர்குலைக்க திட்டமிடுகிறார் என்றெல்லாம் பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆனால், மற்றொரு…

kpy bala

KPY பாலாவின் விவகாரம் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நிதி உதவி பெறுகிறார், அரசாங்கத்தையே சீர்குலைக்க திட்டமிடுகிறார் என்றெல்லாம் பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆனால், மற்றொரு பக்கம், அவர் தனது சொந்த பணத்தைச் செலவு செய்து மக்களுக்கு உதவி செய்கிறார், அவர் மீது பழி சுமத்த வேண்டாம் என்று ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர். இந்த விவகாரம் குறித்து பலர் பலவிதமாக கருத்துக்களை யூடியூபில் கூறி வருகின்றனர். அந்த வகையில் அரசியல் ஆலோசகர் கேப்ரியல் இதுகுறித்து கூறியதாவது:

KPY பாலா ஒரு சாதாரண தனிநபர். அவரை ஒரு பெரிய வெளிநாட்டு கைக்கூலியாகவோ, அமெரிக்க கைக்கூலியோ, சீன கைக்கூலியோ அல்லது தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் நபராகவோ நான் பார்க்கவில்லை. சில சமயங்களில் நமக்கு இப்படிப்பட்ட சதி மனப்பான்மை (Conspiracy Mindset) இருக்கும். அப்படி பார்க்கும்போது சிறிய விஷயங்களையும் பெரிய விஷயங்களோடு தொடர்புபடுத்தி பார்ப்போம். ஆனால், KPY பாலாவால் ஒரு அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் அளவுக்கு பெரிய காரியங்களை செய்ய முடியாது.

ஒரு மனிதரை கண்டாலே நமக்கு சில ‘சிவப்பு எச்சரிக்கை குறியீடுகள்’ (Red Flags) தோன்றும். தான் செய்யும் நல்ல காரியங்களை எல்லாம் விளம்பரப்படுத்தி கொண்டே இருப்பதும், அதை வீடியோ எடுத்து போடுவதும், மற்றவர்களிடம் அதைப்பற்றி பேசுவதும் எனக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கைக் குறியீடுதான். அப்படி ஒருவர் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கிறார் என்றால், அவரிடம் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாக நான் கருதுகிறேன்.

உண்மையாகவே நல்ல காரியங்கள் செய்யும் பலர், அதை விளம்பரப்படுத்த மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, என் நண்பர்கள் பலரும் யாருக்கும் தெரியாமல் உணவு பொட்டலங்களை எடுத்து சென்று மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், அதை அவர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தவில்லை. அதேபோல் பலர் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பலர் பிறருக்கு உதவி செய்துவிட்டு, அதை செல்ஃபி எடுத்து பதிவேற்றினார்கள். 100 ரூபாய் உதவி செய்துவிட்டு 1000 ரூபாய் உதவி செய்வது போல் பில்டப் செய்வார்கள். ஒருவருக்கு உதவி செய்யும்போது அதை விளம்பரப்படுத்துவது மிகவும் மலிவான செயல். ஏனென்றால், நீங்கள் அவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக அதை செய்யவில்லை, மாறாக, உங்களுக்கு லைக்ஸ் கிடைக்க வேண்டும், நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறீர்கள். அந்த வகையான குறைபாடு KPY பாலாவிடம் இருக்கிறது.

KPY பாலாவுக்கு வெளிநாட்டு சதி திட்டத்தில் பங்கு இருக்கலாம் என்பது ஒருவித சதி சித்தாந்தம் (Conspiracy Theory). நமது தமிழ்நாட்டில், குறிப்பாக இடதுசாரிகளின் அரசியல் கலாச்சாரத்தில் இந்த மனப்பான்மை பரவலாக உள்ளது. அதாவது, அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய சக்தி என்றும், அது இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்றும் பல செய்திகள் இந்திரா காந்தி காலத்தில் பரவ ஆரம்பித்தன.

ஒருவரை மேலே ஏற்றுவதும், பிறகு அவரை அடித்து கீழே இறக்குவதும் மக்களின் இயல்பான குணம். ஒரு தனிநபர் நன்கு பிரபலமானவுடன், அவர் சற்று எல்லை மீறி செல்வதாக மக்கள் கருதும்போது, அவரை தாக்கி கீழே தள்ளுவதற்கு ஒரு வாய்ப்பை தேடுவார்கள். KPY பாலா மிகவும் பிரபலமடைந்துவிட்டதால், அவருக்கு எதிராக பேச ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் மக்கள் அதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

இந்த விவகாரம் தற்காலிகமானதுதான். இன்னும் ஒரு சில மாதங்களில் இது குறித்து யாரும் பேச மாட்டார்கள். ஏனென்றால், மக்களுக்கு வேறு ஒரு புதிய பிரபலத்தைப் பிடித்து அவரை விமர்சிக்க ஒரு காரணம் கிடைத்துவிடும். இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. KPY பாலாவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனை தேவையற்ற பரபரப்பு என்றும், இதில் பெரிய அளவில் சதித்திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் நான் கருதுகிறேன் என்று கேப்ரியல் தெரிவித்துள்ளார்.