அண்மைக் காலமாகவே நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வுகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி, மக்களை நேரடியாகச் சந்திக்கும் ‘விஜய்யின் மக்கள் சந்திப்பு’ பயணங்கள் மூலம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த வரிசையில், விஜய்யின் அடுத்த விசிட் நாமக்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம், வெறும் மக்கள் சந்திப்பாக மட்டுமில்லாமல், சில முக்கிய அரசியல் விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நாமக்கல்லை மையமாக வைத்து பேசப்பட்டு வந்த ‘கிட்னி திருட்டு’ விவகாரம் இந்த முறை வெடித்து சிதறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சமீபத்தில், ஈரோட்டில் நடந்த விஜய்யின் மக்கள் சந்திப்பில், அவர் மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே ஸ்டாலின் குடும்பத்தையும் தி.மு.க. அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். “ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை மட்டும் தேர்தலில் நிறுத்தினால், அது மக்களுக்கு செய்யும் துரோகம்” என்று அவர் பேசியது, ஸ்டாலின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை குறிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
நாமக்கல்லில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பிலும், விஜய் தனது தாக்குதலை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அதிகம் உள்ளன. இங்கு, ‘சட்டவிரோத கிட்னி திருட்டு’ மற்றும் ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை’ மோசடிகள் நடைபெறுவதாக நீண்டகாலமாகப்பேசப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விவகாரங்கள் குறித்து பேச யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், விஜய் இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தால், அது தி.மு.க. அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பயணம், சினிமாவை ஒத்திருக்கிறது. சினிமாவில் ரஜினிகாந்துடன் ‘நம்பர் 1’ இடத்துக்காக போட்டியிட்ட விஜய், அரசியலில் ஸ்டாலினுக்கு போட்டியாக வளர்ந்து வருகிறார்.
ஒரு காலத்தில், ரஜினிகாந்தின் ரசிகர் மன்றங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. விஜய் தனது கடும் உழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலம், தனது ரசிகர் மன்றங்களை வலிமைப்படுத்தி, தமிழகத்தில் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை குறி வைத்தார். ஆனால் அவர் ஒருபோதும், ரஜினிக்கு போட்டியாக செயல்படவில்லை என்றும், மாறாக, ரஜினியின் செயல்பாடுகளை கவனித்து, அதைவிட பலமடங்கு சிறப்பாக தனது மன்றங்களை உருவாக்கினார் என்ற விமர்சனமும் உண்டு.
இதேபோல், அரசியலிலும் தி.மு.க.வுக்கு போட்டியாக தனித்து பயணிக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வின் செயல்பாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள், வாரிசு அரசியல், பாஜக எதிர்ப்பு என்ற நாடகம் என அனைத்தையும் விமர்சனம் செய்து வருகிறார். தி.மு.க.வின் பலவீனங்களை அறிந்து, அதை கொண்டு தனது அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் திமுகவை தவிர பிற கட்சிகளின் விமர்சனங்களையும் விஜய் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக சீமானை எல்லாம் ஒரு அரசியல் தலைவராகவே விஜய் ஏற்று கொள்ளவில்லை.
நாமக்கல்லில் நடைபெறும் மக்கள் சந்திப்பு, விஜய்யின் அரசியல் நகர்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த சந்திப்பு, ‘கிட்னி திருட்டு’ விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் அது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும். தேசிய ஊடகங்கள் அந்த விவகாரத்தில் தலையிடும், எனவே விசாரணை முடுக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
