விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருவாரூரில் நடத்திய பொதுக்கூட்டம், அரசியல் அரங்கில் புதிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக கருதப்படும் திருவாரூரில், விஜய்க்கு கிடைத்த வரவேற்பு, ஆளும் கட்சிக்கு ஒரு கிலியை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தை விட, திருவாரூரில் விஜய் பேசிய கூட்டம், மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை ஈர்த்துள்ளது. நாகப்பட்டினத்தில் விஜய் பேசிய பேச்சுகள் வைரலானதால், திருவாரூருக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் மேடையை அடைவதற்கே சுமார் 35 நிமிடங்கள் ஆனது. இந்த கூட்டம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஐடி விங்குகள், கூட்டத்தின் அளவை குறைத்துக் காட்டும் படங்களை பகிர்ந்தன. ஆனால், மக்கள் மத்தியில் உள்ள செல்போன்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு மற்றும் புகைப்படங்கள், அந்த கூட்டத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தன. இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்று ஒரு அரசியல் விமர்சகர் குறிப்பிட்டார்.
திருவாரூர் கூட்டத்தில் விஜய், நாகப்பட்டினத்தை போல் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசவில்லை என்றாலும், அந்த மாவட்டத்தின் உள்ளூர் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தினார். “ஓடாத தேரை ஓடவைத்தோம் என்று பெருமை பேசும் நீங்கள், திருவாரூரில் சாலைகளின் நிலைமையை ஏன் சரிசெய்யவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உபகரணங்கள் பற்றாக்குறை குறித்தும், விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்குவதாகவும் குற்றம்சாட்டினார். ஒரு விவசாயி மூலம் இந்த தகவல் தனக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் பிரச்னைகளை அவர் கையில் எடுத்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
பேச்சின் முடிவில், விஜய் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றியது விவாதத்திற்குள்ளானது. “இந்த கூட்டம் ஓட்டுகளாக மாறாது என்று கூறுகிறார்கள். நீங்கள் ஓட்டு போடுவீர்களா?” என்று அவர் மக்களை நோக்கி வினவ, கூட்டத்தினர் “போடுவோம்” என்று கோஷமிட்டனர். இந்த அணுகுமுறை, விமர்சனங்களுக்கு நேரடியாக மக்கள் மன்றத்திலேயே பதிலளிப்பதாக கருதப்படுகிறது.
திருவாரூர், தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் சொந்த ஊர் என்பதால், அங்கு விஜய்யின் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் இந்த இடத்தில், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டது, அனைத்து கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. இது தி.மு.க.வுக்கு ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்றும், வருகின்ற தேர்தலில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் கச்சத்தீவு பிரச்னை குறித்து பேசிய பின்னர், மத்திய அரசு அதிகாரிகள் அதை ஆய்வு செய்ய சென்றது, விஜய்யின் பேச்சின் தாக்கத்தை காட்டுகிறது என்று கூறப்படுகிறது. பல அரசியல் தலைவர்கள் நீண்டகாலமாக கச்சத்தீவு பற்றி பேசி வந்தாலும், விஜய்யின் பேச்சு பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இது ஒரு நடிகராக இல்லாமல் ஒரு அரசியல் தலைவராக அவர் வளர்ந்து வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஒரு புதிய கட்சி தலைவராக, விஜய் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறார். அவரது பேச்சில் “சினிமாதனம்” இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன, குறிப்பாக அவர் தலையில் பச்சைத்துண்டு கட்டியதை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதை விவசாயிகளுடன் ஒன்றிணைவதற்கான அடையாளமாக பார்க்க வேண்டும் என்று விஜய்க்கு ஆதரவானவர்கள் கூறுகின்றனர். மேலும், அவர் தனது அரசியல் பயணம் ஆரம்பிப்பதற்கு முன், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போராட்டங்களுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு நடிகர் என்பதை தாண்டி, தன்னை முழுமையான அரசியல் தலைவராக நிரூபிக்க இன்னும் நிறைய சவால்களை விஜய் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
