டொனால்ட் டிரம்ப்பின் H1B விசா கட்டண உயர்வு அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விசா கட்டண உயர்வு குறித்து, குறிப்பாக இந்திய ஊழியர்களிடையே ஒரு வித குழப்பமும், கவலையும் நிலவி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணத்தை விதிக்கும் புதிய உத்தரவில் கையெழுத்திட்டார். இது செப்டம்பர் 21, 2025 அன்று நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் இது ஒரு வருடாந்திர கட்டணம் என்று வதந்திகள் பரவின. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக H1B மற்றும் H4 விசா வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
மெட்டா, மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடனடியாக அமெரிக்காவிற்குத் திரும்புமாறு அறிவுறுத்தின. இந்த அவசரம் ஏன் என்றால், செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்குள் நுழையாவிட்டால், விசா செல்லாததாகவோ அல்லது மீண்டும் நுழையும்போது பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என அஞ்சினர்.
ஆரம்பத்தில், இந்த புதிய கட்டணம் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கும், விசா புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என சில அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் ஊழியர்கள், குறிப்பாக விடுமுறையில் இந்தியா சென்றவர்கள், உடனடியாக திரும்பி வர அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால், பின்னர் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தார். அதன்படி:
இந்த $100,000 கட்டணம் ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம்.
இது புதிய விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏற்கனவே H1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் விசா புதுப்பித்தலுக்கு இந்த கட்டணம் பொருந்தாது.
வெளிநாட்டில் இருக்கும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அமெரிக்காவிற்கு திரும்பி வரலாம்.
இந்தக் குழப்பமான சூழல், பல நிறுவனங்களையும் ஊழியர்களையும் அவசர முடிவுகளை எடுக்கத் தூண்டியது.
புதிய விசா கட்டண உயர்வு இந்தியர்களை பெருமளவில் பாதிக்கும். ஏனென்றால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட H1B விசாக்களில் சுமார் 71% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த விசா முறையை நம்பியுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப வர்த்தக அமைப்பான NASSCOM, இந்த திடீர் கட்டண உயர்வு, அமெரிக்காவில் திட்டங்களை கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கும் என எச்சரித்துள்ளது.
இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு இந்த H1B விசாவை அதிகம் நம்பியுள்ளன. அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற நிறுவனங்களும் இந்திய ஊழியர்களை கணிசமான எண்ணிக்கையில் பணியமர்த்தியுள்ளன. புதிய கட்டண உயர்வு, எதிர்காலத்தில் புதிய ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதை மிகவும் சவாலானதாக மாற்றும்.
அமெரிக்கா இந்த நடவடிக்கையை, அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக எடுத்துள்ளதாக கூறுகிறது. ஆனால், அமெரிக்காவில் திறமையான தொழில்நுட்ப பட்டதாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர். வெளிநாட்டு திறமைகளை, குறிப்பாக இந்தியர்களை, அமெரிக்க நிறுவனங்கள் மலிவாக வேலைக்கு அமர்த்த முடியாவிட்டால், கண்டுபிடிப்புகள் குறையலாம், நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கலாம், இறுதியில் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கொள்கை, அமெரிக்கா தொடர்ந்து உலகளாவிய தொழில்நுட்ப திறமையாளர்களின் இலக்காக இருக்குமா அல்லது இந்த கதவு மூடப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
