டிரம்ப் போட்ட எச்-1பி விசா என்ற ஹைட்ரஜன் குண்டு.. தாய்நாடு திரும்புவதை தவிர இந்தியர்களுக்கு வேறு வழியில்லை.. சம்பளமோ $97,000.. ஆனால் விசா கட்டணமோ $100,000.. தாய்நாடு வாங்க.. ஸ்டார்ட் அப் தொடங்குங்க.. 5 வருடத்தில் அமெரிக்காவை விட முன்னேறிவிடலாம்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்-1பி விசா கட்டணத்தை அதிரடியாக $100,000 ஆக உயர்த்தி உலக நாடுகளுக்கு குறிப்பாக, இந்திய ஐடி துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த கட்டண உயர்வு,…

h1b

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்-1பி விசா கட்டணத்தை அதிரடியாக $100,000 ஆக உயர்த்தி உலக நாடுகளுக்கு குறிப்பாக, இந்திய ஐடி துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 21 முதல் ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும். அதாவது நாளை முதல் அமலாகிறது.

எச்-1பி விசா என்பது அமெரிக்காவில் அதித் திறன்கொண்ட பணியாளர்களுக்காக வழங்கப்படும் மிக முக்கியமான பணி விசா ஆகும். மென்பொருள் பொறியாளர்கள், தரவு அறிவியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோர் இந்த விசா மூலம் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் பணிபுரியலாம், மேலும் அதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இந்த விசா, அமெரிக்க நிறுவனங்களால் உள்நாட்டில் கிடைக்காத திறமைகளை கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க உதவுகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டில், வழங்கப்பட்ட மொத்த எச்-1பி விசாக்களில் 71% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 2.8 லட்சம் இந்தியர்கள் இந்த விசாவை பெறுகின்றனர். இந்த விசா கட்டண உயர்வால், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு $100,000 செலவிட நேரிடும். தற்போது எச்-1பி விசா ஊழியர்களின் சராசரி ஆண்டு சம்பளம் சுமார் $97,000 ஆக இருப்பதால், விசா கட்டணமே ஊழியரின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும்.

அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா, கூகிள் போன்ற பெரிய நிறுவனங்களும், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும் இந்த புதிய விதியால் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் உலகளாவிய பங்குகள் சரிந்துள்ளன.

அமெரிக்காவில் ஏற்கனவே எச்-1பி விசாவில் இருக்கும் ஊழியர்களுக்கு விசா புதுப்பித்தல் என்பது கடினமானதாக மாறும். இதனால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி, உள்நாட்டிலேயே அமெரிக்க ஊழியர்களை நியமிக்கக்கூடும். இதன் விளைவாக, இந்திய ஐடி ஊழியர்கள் பலர் தாய்நாடு திரும்ப நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், இந்த முடிவு அமெரிக்காவின் திறமையை பலவீனப்படுத்தும் என விமர்சித்துள்ளனர். எலான் மஸ்க் போன்ற பிரபலங்கள், எச்-1பி விசா திட்டம் தான் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி அடைய உதவியது என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கை அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் ஊதியங்களையும் பாதுகாக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த கட்டண உயர்வு, இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தக மாதிரிகளை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடும். இதன் காரணமாக, இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்கா செல்லாமல், இந்தியாவிலிருந்தே தொலைதூர பணியாளர்களாக வேலை செய்யும் போக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த விவகாரம், இந்தியா-அமெரிக்கா உறவில் ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், இதை கையாள்வதற்கு தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த முடிவு இந்திய திறமையாளர்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.