திருச்சியில் ஸ்டார்ட் ஆன அரசியல் புயல்.. இன்று நாகையில் மையம்.. நாங்கள் கபட நாடக திமுக அரசும் இல்லை. பாசிச பாஜக அரசும் இல்லை.. 2வது சனிக்கிழமையே எதிரிகளுக்கு கிலி வந்துருச்சு.. அடுத்த சனிக்கிழமை இன்னும் பயங்கரமா இருக்கும்..!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இன்று அவர் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்த…

vijay nagai

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இன்று அவர் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்த நிலையில் அந்த பகுதி மக்களின் நீண்டகால பிரச்னைகளை முன்வைத்து, திமுக அரசுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார்.

நாகப்பட்டினத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், “மீன் ஏற்றுமதியில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாக நாகை உள்ளது. ஆனால், இங்கு மீன்களை பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அதேபோல, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகளும் இங்கு மிக குறைவாகவே உள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.

இந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அடுக்குமொழியில் பேசிப்பேசி, காதுகளில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆட்சி செய்தது போதாதா? இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, இன்னும் எதற்காக ஆட்சியில் இருக்கிறார்கள்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் மதுரை மாநாட்டிலேயே பேசியிருந்தேன். மீனவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை. நான் இன்று நேற்று அல்ல, 14 ஆண்டுகளுக்கு முன்னால், 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி நாகையிலேயே மீனவர்களுக்காக பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறேன். அப்போதும் மக்கள் இயக்கமாக நின்றோம். இப்போதும் தமிழக வெற்றிக் கழகமாக மக்கள் பக்கம் நிற்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்” என்று அவர் கூறினார்.

மீனவர்களின் கஷ்டங்களை பார்த்துவிட்டு, வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு, கப்சிப்பென்று அமைதியாக இருப்பதற்கு நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு இல்லை. இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என்று பிரித்து பார்க்கும் பாசிச பாஜக அரசும் இல்லை” என இரு கட்சிகளையும் சாடினார்.

எனது மக்கள் சந்திப்பு பயணங்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ‘அந்த இடத்தில் பேசக்கூடாது, இந்த இடத்தில் பேசக்கூடாது, 10 நிமிடம் மட்டுமே பேச வேண்டும்’ என்று கூறுகிறார்கள். நான் பேசுவதே வெறும் மூன்று நிமிடங்கள்தான். அரியலூரில் மின் தடையை ஏற்படுத்தினார்கள், திருச்சியில் ஒலிபெருக்கியின் வயரை துண்டித்தார்கள். பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வந்தால் இப்படி செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

நீங்கள் நேரடியாக சவால் விடுங்கள். பூச்சாண்டி வேலைகளை விட்டுவிடுங்கள். கொள்கையை பெயருக்கு வைத்துக்கொண்டு குடும்பத்திற்காக சுரண்டும் நீங்கள் பெரியவர்களா? அல்லது சொந்தமாக உழைத்துச் சம்பாதித்து மக்களை சந்திக்க வரும் நான் பெரியவனா? இது 2026-ஆம் ஆண்டில் தெரியும்” என்று சூளுரைத்தார்.

விஜய் தனது உரையில், நாகை மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளையும் பட்டியலிட்டார்:

மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும்.

அலையாத்தி காடுகள் அழிவதை தடுக்க வேண்டும்.

காவிரி நீர் கிடைக்காததால் மக்கள் படும் தாகத்தை தீர்க்க வேண்டும்.

ஒரு அரசு கடல்சார் கல்லூரியை அமைக்க வேண்டும்.

மீன் சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவி, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

நாகூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிக்க வேண்டும்.

மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும்.

மேலக்கோட்டை மேம்பாலம் மற்றும் தஞ்சாவூர்-நாகை சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதை தடுக்க, சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும்.

இறுதியாக, “இனிமேல் இதுபோன்ற தடைகள் வந்தால், நான் நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்பேன்” என்று கூறி தனது பேச்சை முடித்தார்.