மேடை நிகழ்ச்சி, பின்னர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி, அப்படியே திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகர் என மெல்ல மெல்ல வளர்ந்து உயரம் தொட்டவர் தான் நடிகர் ரோபோ சங்கர். மிக கடினமாக உழைத்ததுடன் மட்டுமில்லாமல், அனைவருடனும் மிக இயல்பாக பேசி பழகும் குணமும் கொண்ட ரோபோ சங்கர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
மது அருந்தும் பழக்கம் அவருக்கு இருந்து வந்த சூழலில், அதை நிறுத்தி மீண்டு வந்த சமயத்தில் தான் திடீரென படப்பிடிப்பில் இருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சமயத்தில் தான் பலனளிக்காமல் காலமானார் ரோபோ சங்கர்.
46 வயசு தான்..
46 வயதில் மறைந்த ரோபோ சங்கருக்கு நடிகர்கள் கமல்ஹாசன், கார்த்தி, சிம்பு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவிக்க, தனுஷ், உதயநிதி ஸ்டாலின்,, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, பிரபல நடிகையும், ரோபோ சங்கருக்கு மிக நெருங்கியவருமான ஆர்த்தி கணேஷ், அவரது மறைவு பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஹார்ட் பீட்டே நின்னு போய்டுச்சு..
“ரோபோ சங்கர் அண்ணாவ எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். எனக்கு ஒரு அண்ணா மாதிரி. அவரு, அவங்க மனைவி பிரியங்கா, மகள், மருமகன்னு எல்லாருமே ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்தாங்க. அடிக்கடி ரோபோ அண்ணா பற்றி அவர் இறந்ததாக வதந்திகள் வரும். இப்போதும் அப்படி தான் வதந்திகள் வருகிறது என நினைத்து அவர் மனைவி பிரியங்காவுக்கு போன் செய்து விட்டேன். ஆனால், நான் அழைத்த போனை அவர் எடுத்து அழ தொடங்கியதும் பொய்யான செய்தி என எதிர்பார்த்த எனக்கு ஒரு நொடி இதய துடிப்பே நின்று போய்விட்டது.
அண்ணன் அனைவரிடமும் ரொம்ப நெருக்கமாக பழகுவார். அவரோட ஆசைகள் எதுவும் இன்னும் நிறைவேறவும் இல்லை. இவ்வளவு சீக்கிரமாக அவருக்கு இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய விஷயங்களில் இருந்து எல்லாம் தப்பித்து வந்த ரோபோ சங்கர் அண்ணாவிற்கு இப்போது திடீரென இப்படி ஆகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரோட ஆத்மா சாந்தியடையுமா என எனக்கு தெரியவில்லை. அவ்வளவு ஆசைகளை கொண்டிருந்தவர் தான் ரோபோ சங்கர்.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்ன கஷ்டமோ, சீக்கிரமாக அனைவரும் போவதை பார்க்கும் போது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் எல்லாம் சொல்லவே முடியாது. எங்கள் குடும்பத்தில் ஒரு விழா என்றால் குடும்பமாக வந்து கலந்து கொண்டு பொழுது போக்கவும் செய்வார். நிறைய பேருக்கு ஏராளமான உதவிகளையும் செய்துள்ளார் ரோபோ சங்கர்” என உருக்கமாக பேசியுள்ளார் நடிகை ஆர்த்தி கணேஷ்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

