அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்நாட்டு எஃகு மற்றும் அலுமினிய தொழில்களை பாதுகாக்கும் நோக்கில், கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இந்த உலோகங்களுக்கான வரியை 25% இலிருந்து 50% ஆக உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் கொள்கை மாற்றம், வட அமெரிக்காவின் பல தொழில்துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரி உயர்வு, தொடக்கத்தில் மூலப்பொருட்களை மட்டுமே பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கம் பல துறைகளிலும் எதிரொலிக்கும். வாகன உற்பத்தி ஆலைகள், கட்டுமானப் பணிகள், விமான பாகங்கள் தயாரிப்பு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எனப் பல்வேறு தொழில்களுக்கு இந்த உலோகங்கள் அத்தியாவசியமானவை.
வாகனங்களின் பாகங்களான ஸ்டீல் ஷீட்கள் மற்றும் அலுமினியம் பாடி பேனல்கள் விலை உயர்ந்தால், வாகன உற்பத்தியாளர்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஒன்று, செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும், அல்லது உள்நாட்டு பொருட்களை நாட வேண்டும், அல்லது வடிவமைப்புகளை மாற்றியமைத்து மூலப்பொருட்களின் தேவையை குறைக்க வேண்டும். இந்த தேர்வுகள் ஒவ்வொன்றும் பெரும் சவால்களை கொண்டவை.
கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டுமான பணிகளுக்கு எஃகு விலைகள் உயர்ந்தால், திட்டங்களின் செலவு அதிகரிக்கும். இது புதிய திட்டங்களை தள்ளிவைக்கவோ அல்லது பட்ஜெட்டை குறைக்கவோ வழிவகுக்கும்.
விமான பாகங்கள் தயாரிப்புக்கு தேவையான அலுமினியம் உலோகக் கலவைகள் மிகவும் துல்லியமானவையாகவும், சான்றளிக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். இதனால், வேறு சப்ளையர்களுக்கு மாறுவது எளிதான காரியமல்ல. வரி உயர்வால் விலை உயர்ந்தாலும், உற்பத்தியாளர்கள் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
இந்த வரி உயர்வால், அமெரிக்காவில் உள்ள சில எஃகு ஆலைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கலாம். ஆனால், மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் தங்கள் லாப வரம்புகளை குறைக்கவோ அல்லது நுகர்வோர் விலையை அதிகரிக்கவோ நேரிடும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
வர்த்தகப் போர்களின் வரலாறு நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. ஒரு நாடு வரி விதித்தால், அதற்கு பதிலடியாக பிற நாடுகளும் வரி விதிக்கக்கூடும். இது விவசாயம் போன்ற சம்பந்தமில்லாத துறைகளையும் பாதிக்கும். எனவே, இத்தகைய கொள்கை முடிவுகள் வெறும் முழக்கங்களாக இல்லாமல், நிஜ வாழ்க்கையில் எற்படும் விளைவுகளை கவனமாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த வரி உயர்வு ஒரு இரவில் விலைகளை மாற்றியமைத்தாலும், அதன் முழுமையான தாக்கம் மாதங்கள் அல்லது காலாண்டுகளுக்கு பிறகே தெரியவரும். இது வாங்குவோர், விற்போர் மற்றும் பணியாளர்கள் இடையே நிலையான தகவல் தொடர்பு மற்றும் கவனமான திட்டமிடல் அவசியமான காலகட்டம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
மேலும் அமெரிக்க அதிபரின் 50% இறக்குமதி வரி விதிப்பு கொள்கை, உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டாலும், அது எதிர்பாராத வகையில் கனடாவின் கடுமையான பதிலடியை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினிய தொழில்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக விதிக்கப்பட்ட இந்த வரி, கனடாவின் முக்கிய மூலப்பொருள் ஏற்றுமதியை துண்டிக்கும் முடிவுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்காவின் உற்பத்தி துறை பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
முன்பு, அமெரிக்கா வரி விதித்த போது, கனடா மற்றும் பிற நாடுகள் பதிலடி வரிகளை விதித்தன. ஆனால், இந்த முறை கனடா மூலப்பொருட்களையே நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்திருப்பது, சர்வதேச வர்த்தகத்தில் ஒரு புதிய போக்கை காட்டுகிறது. இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மேலும் சிக்கலாகும். இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபரின் 50% வரி விதிப்பு திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
