கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம்போல் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி, பாரம்பரிய திராவிட கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. வயதான தலைவர்களை நம்பி இருக்கும் திராவிட கட்சிகள், இந்த இளைய தலைமுறை அரசியல் எழுச்சியை எப்படி சமாளிக்கப் போகின்றன என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
நேபாளத்தில் நடந்த வன்முறை புரட்சியை போல் அல்லாமல், தமிழகத்தில் கத்தியின்றி, இரத்தமின்றி நடக்க போகும் அமைதியான புரட்சி இது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த புரட்சிக்குக் காரணம், Gen Z எனப்படும் இளம் தலைமுறையின் அரசியல் விழிப்புணர்வும், தவெக தலைவர் விஜய்யின் அணுகுமுறையும் ஆகும்.
Gen Z என அழைக்கப்படும் இன்றைய தலைமுறையினர் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை கண்டவர்கள். உலக நடப்புகள், அரசியல், சமூக பிரச்சினைகள் என அனைத்தையும் விரல் நுனியில் அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். இவர்களுக்கு பாரம்பரிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளும், இலவச திட்டங்களும் கவர்ச்சிகரமாக தெரிவதில்லை. மாறாக, வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற நீண்டகால நலன்களில் கவனம் செலுத்துகிறார்கள்.
தவெக தலைவர் விஜய், இந்த Gen Z தலைமுறையின் எதிர்பார்ப்புகளைச் சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப தனது அரசியல் பயணத்தை வடிவமைத்துள்ளார். அவர் தனது பேச்சுகளில், இளைஞர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் பிரதிபலிக்கிறார். இலவசங்கள் பற்றி பேசுவதற்குப் பதிலாக, புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், தரமான கல்வி வழங்குதல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற திட்டங்களை முன்வைக்கிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியல் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து வருகிறது. இந்த இருபெரும் கட்சிகளின் தலைமை, இப்போது 70 வயதுக்கும் மேல் உள்ள தலைவர்களிடம் உள்ளது. அவர்களின் அரசியல் அனுபவம் அசாத்தியமானது என்றாலும், இன்றைய இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் பிரச்சார முறைகள், உரைகள், அணுகுமுறைகள் போன்றவை இன்றைய தலைமுறைக்கு ஏற்ப இல்லை.
டிஜிட்டல் யுகத்தில், அரசியல் பிரச்சாரம் என்பது சமூக வலைத்தளங்கள், இணைய ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் என பல பரிமாணங்களில் விரிவடைந்துள்ளது. ஆனால், திராவிட கட்சிகள் இன்னும் பாரம்பரிய முறையில், பெரிய கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள் போன்றவற்றை நம்பி உள்ளன. இது ஒருபுறம் இருக்க, தவெக தலைவர் விஜய் சமூக வலைத்தளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி வருகிறார். அவருடைய ஒவ்வொரு அறிவிப்பும், பேச்சும், நிமிடங்களில் வைரலாகிவிடுகிறது.
நேபாளத்தில் நடந்த அரசியல் மாற்றம், வன்முறை போராட்டங்கள், அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றால் நிறைந்திருந்தது. ஆனால், தமிழகத்தில் நடக்கவிருப்பது முற்றிலும் மாறுபட்ட புரட்சி. இது வாக்குகளின் மூலம், மக்களின் அமைதியான முடிவின் மூலம் நிகழ போகும் புரட்சி. தவெக தலைவர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றியபோது, அதன் நோக்கமே வன்முறையற்ற அரசியல் பயணம்தான் என்று தெளிவாக கூறினார். அவரது பொதுக்கூட்டங்களில் ஒழுங்குமுறைக்கும் கட்டுப்பாட்டுக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தால் அவரது மரியாதை இன்னும் அதிகரிக்கும்.
இந்த அணுகுமுறை, வன்முறையற்ற அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே, இந்த அரசியல் மாற்றம், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய திசையை வகுத்து, இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
