என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.. இந்தியர்கள் இனி இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம்.. சுதேசி தான் இனி இந்தியர்களின் தாரக மந்திரம்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கு ‘சுதேசி’பொருட்களை வாங்குவது அவசியம் என அவர் தனது 75வது பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு பிறந்த நாள் செய்தியாக வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் 22 முதல் அமலாக…

modi india

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கு ‘சுதேசி’பொருட்களை வாங்குவது அவசியம் என அவர் தனது 75வது பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு பிறந்த நாள் செய்தியாக வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் 22 முதல் அமலாக உள்ள ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட வரி விகிதங்களை சுட்டிக்காட்டி, நாட்டு மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“சுதேசி என்ற எண்ணம், நாட்டிற்கு புதிய உத்வேகத்தைத் தரும். இது பண்டிகை காலம். இந்த காலத்தில், நீங்கள் தொடர்ந்து சுதேசி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நீங்கள் என்ன வாங்கினாலும், அது நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

“நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும், ஒரு இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும்; இந்திய மண்ணின் வாசனை இருக்க வேண்டும். இதை நான் வணிகர்களிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், 2047-க்குள் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதுதான் எனது லட்சியம். அந்த லட்சியத்தை அடைய, சுயசார்பு இந்தியா மட்டுமே வழி” என அவர் குறிப்பிட்டார்.

சுதேசி பொருட்களை வாங்கும்போது, நமது பணம் நாட்டிலேயே சுழற்சிக்கு வரும். வெளிநாடுகளுக்குப் பணம் செல்வது தடுக்கப்படும். பணம் சேமிக்கப்பட்டு, சாலைகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

“சுதேசி பொருட்களை வாங்குவதன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் வியர்வைக்கும் மரியாதை செலுத்துகிறோம். சிறிய குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் முதல், மொபைல், தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி போன்ற பெரிய பொருட்கள் வரை, அனைத்தும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு” என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கடைகளிலும் “இது சுதேசி என பெருமையுடன் கூறுங்கள்!” என்ற பதாகையை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்றும், இதற்காக மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“சுதேசி இயக்கம், மகாத்மா காந்தியால் சுதந்திரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பாரதியா, கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் ஆகியோர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்று அது ஒரு வளர்ந்த பாரதத்திற்கான அஸ்திவாரமாக மாற வேண்டும்” என்பதே பிரதமர் மோடியின் பேச்சில் உள்ள அம்சம் ஆகும்.