இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!

செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் வழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,538.07 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தின்…

Special Trains will be operated between Tambaram – Coimbatore to clear extra rush of passengers

செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் வழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,538.07 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டத்தை இந்த மாதம் நடத்தவுள்ளது.

தற்போது, 73.5 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், அதன் வடிவமைக்கப்பட்ட திறனில் 104%க்கும் அதிகமாக இயங்கி வருகிறது. இதனால், ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்படுவதுடன், இது தமிழகத்தின் ரயில்வே போக்குவரத்தில் ஒரு பெரிய சிக்கலாகவும் உள்ளது. இந்த வழித்தடத்தின் விரிவாக்கம், சென்னையின் திட்டமிடப்பட்ட 192 கி.மீ நீளமுள்ள வட்டார புறநகர் ரயில் பாதையின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த விரிவாக்கம், பயணிகள் மற்றும் சரக்குப்போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டார புறநகர் ரயில் பாதை சென்னை கடற்கரையிலிருந்து தெற்கே தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக சென்று, அங்கிருந்து வடமேற்கே அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டைக்கு செல்லும். பின்னர், வடகிழக்காக ஆவடி வழியாக மீண்டும் சென்னை நகர மையத்திற்கு திரும்பும்.

இந்திய ரயில்வே வாரியம், இந்த திட்டத்திற்கான நில ஆய்வுப் பணியை அக்டோபர் 202ல் நோய்டாவை சேர்ந்த SA Infrastructure Consultants Pvt Ltd நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

தற்போதைய ஒரு வழித்தடத்தில் தினமும் 13 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், இருவழித்தடமாக மாற்றப்பட்ட பிறகு, இதன் திறன் 40 ரயில்களாக அதிகரிக்கும். இதனால், பயணிகள் போக்குவரத்து எளிமையாகும். மேலும், தொலைதூர சரக்கு ரயில்களுக்கான கூடுதல் இடங்களும் கிடைக்கும்.

இந்த திட்டம், சென்னை சென்ட்ரல், கிண்டி, மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் உட்பட 23 முக்கிய போக்குவரத்து மையங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் சரக்கு போக்குவரத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வழித்தடத்தில் சரக்குப் போக்குவரத்து ஏற்கெனவே அதிகரித்து வருகிறது. 2024-25 நிதியாண்டில், 803 ரயில்கள் மூலம் 1.56 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 7.1% அதிகமாகும். வாலாஜாபாத் சரக்குக் கிடங்கு, வாகன ஏற்றுமதி மூலம் ரூ. 32.4 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.