நடிகர் விஜய், தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்திய பிறகு, “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சியை தொடங்கி, மக்கள் மத்தியில் நேரடியாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த பயணம், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. அவர் மக்களை சந்திப்பாரா என்ற கேள்விகளை கேட்டவர்களுக்கு, நேரடியாக சந்தித்ததன் மூலம் அவர் பதில் அளித்துள்ளார். ஆனால், இந்த பரப்புரை அவர் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதுதான் தற்போதைய முக்கியக் கேள்வி.
மக்களை சந்திப்பது என்பது பொதுக்கூட்டங்கள், பேரணிகள் அல்லது ஊர்வலங்கள் மூலமாக மட்டுமே சாத்தியமில்லை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை, பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, லட்சக்கணக்கானோர் முன் பேசும் பேச்சுக்கு இணையானது ஒரே ஒரு ட்வீட். எனவே இந்த டிஜிட்டல் உலகில் மக்களை நேரடியாக சந்தித்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும், நேரடி மக்கள் சந்திப்பு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
விஜய், தனது கட்சி தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளேயே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் மாநாடுகளை நடத்தியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகவும் அவர் போராட்டம் நடத்தினார். இந்த செயல்கள், அவர் தொடர்ந்து மக்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை காட்டுகின்றன.
விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு அவருக்கு ஏற்கெனவே ஆதரவாக இருக்கும் ரசிகர்களின் வாக்குகளை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது. புதிய வாக்குகளை அதிகளவில் இது ஈர்த்துள்ளதா என்றால், கண்டிப்பாக ஆம் என்று தான் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் ஊடகங்களுக்கு இது ஒரு பெரிய காட்சி விருந்தாக அமைந்தது. டிரோன் ஷாட்டுகள் மூலம் எடுக்கப்பட்ட கூட்டத்தின் காட்சிகள், சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றன.
விஜய்யின் வருகை, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தி.மு.க.வின் வாக்குகளை பிரித்து, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு காரணமாக அமைந்தது. அதேபோல, விஜய்யின் கட்சி ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பிரித்து, அது வேறு ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக அமையுமா? அல்லது இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி அவரே ஆட்சியை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் அவர் தனியாக போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்று நம்புவது கடினம். விஜய் கண்டிப்பாக அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. ஆனால், அந்த வாக்குகள் ஆட்சி அமைக்க தேவையான அளவு கிடைக்குமா? என்ற சந்தேகத்தையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். அதிமுக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், நிச்சயம் தவெக கூட்டணி ஆட்சியை பிடித்துவிடும், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சீமானின் கூற்றுப்படி, விஜய் காகிதத்தை பார்த்துப் பேசுகிறார் என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், பேச்சாற்றல் மட்டுமே அரசியலில் வெற்றிபெறுவதற்கான அளவுகோல் அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் சிறந்த பேச்சாளர்கள் அல்லாதபோதும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதே சமயம், சிறந்த பேச்சாளர்களாக அறியப்பட்ட நாஞ்சில் சம்பத், டி. ராஜேந்தர் போன்றோர் அரசியல் வெற்றியைப் பெறவில்லை.
மக்கள் ஒரு தலைவரை நம்புவதே முக்கியம். அந்த நம்பகத்தன்மை இருந்தால், அவர் பேசுவது, அதன் பாணி போன்றவை இரண்டாம் பட்சம்தான். இன்றைய இளைஞர்கள் மத்தியில் விஜய் ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அந்த இளைஞர்கள் தேர்தல் நாளில் பல்வேறு இடையூறுகளை தாண்டி வாக்களித்துவிட்டால் சினிமா போல் அரசியலிலும் விஜய் சூப்பர் ஸ்டார் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
