நடிகர் விஜய், தனது “தமிழக வெற்றிக் கழகம்” மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு, அவரது ஒவ்வொரு அசைவும் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அவரது மக்கள் சந்திப்பு கூட்டங்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை வெவ்வேறு விதமாக பாதிப்படைய செய்துள்ளன. தி.மு.க.வின் தலைவர்கள் வெளிப்படையாகவே விஜய்யின் வருகை குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில், அ.தி.மு.க. தரப்பு பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறது. இந்த அரசியல் சூழல் குறித்து விரிவாக அரசியல் விமர்சகர்கள் ஊடகங்களில் அலசி வருகின்றனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
விஜய் மக்கள் சந்திப்புக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, “இது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, அ.தி.மு.க.வின் வாக்குகள்தான் பிரியும்,” என்று தி.மு.க.வின் தலைவர்கள் வெளிப்படையாக பேசினாலும், அவர்களின் உள்மனதில் ஒரு கலக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஐ. பெரியசாமி, அன்பில் மகேஷ் போன்ற பல முக்கிய தலைவர்கள் விஜய்யின் மக்கள் சந்திப்பு குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிப்பது, அவர்களின் அச்சத்தை காட்டுகிறது.
தி.மு.க. தற்போது ஆட்சியில் உள்ளது. விஜய்யின் எழுச்சி, அவர்களின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஒருவேளை, 10% வாக்குகள் குறைந்தால்கூட, அது ஆட்சிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும். வெற்றி பெற்று 118 இடங்களை அடையாமல் 117 இடங்களை வென்றால் கூட, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் அரசியல் விளையாட்டுகளை தொடங்கக்கூடும்.
திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால் தி.மு.க. ஏன் தொடர்ந்து விஜய் குறித்தும், விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்தும் பேச வேண்டும்? கனிமொழி உட்பட பத்து அமைச்சர்கள் விஜய்யின் வருகை குறித்து பேசுவது, அவர்களது கலக்கத்தையே காட்டுகிறது. “விஜய்யால் எங்களுக்கு பாதிப்பு இல்லை” என்று வெளிப்படையாக பேசினாலும், இது வெறும் “ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்” என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு புதிய தலைமை வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். விஜய்யின் அரசியல் நுழைவு, அந்த மாற்றத்திற்கான விருப்பத்தை நிறைவேற்றுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள், “விஜய்க்கு ஓட்டு போடுவோம், அவர் தவறு செய்தால் அடுத்த தேர்தலில் மாற்றிவிடலாம்” என்று நினைக்கிறார்கள். இது தி.மு.க.வின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
விஜய்யின் வருகை குறித்து தி.மு.க. பதறுவதுபோல, அ.தி.மு.க. பதறவில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம், அ.தி.மு.க., விஜய் தங்கள் அணியுடன் இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறது.
அ.தி.மு.க. தங்கள் கூட்டணியில் விஜய் சேர வாய்ப்புள்ளது என அ.தி.மு.க. கருதுகிறது. ஏனெனில் அவரது பேச்சில் தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பதுபோல, அ.தி.மு.க.வை அவர் விமர்சிக்கவில்லை. இந்த வாய்ப்பு திறந்தே உள்ளது. ஒருவேளை, விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால், அது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜய்யை தொடர்ந்து விமர்சிப்பது, விஜய்க்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சீமான் தனியாக நின்று அதிகாரத்தை கைப்பற்ற முடியாத நிலையில், விஜய் தன்னுடைய கட்சியின் இளைஞர்கள் வாக்குகளை கவர்ந்துவிடுவாரோ? மீண்டும் ஒரு சதவீதமாக தனது கட்சியின் வாக்கு சதவீதம் சென்றுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக விஜய்யை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் சீமானின் விமர்சனங்கள், அவருக்கு அரசியல் ரீதியாக எந்த நன்மையையும் அளிக்காது; மாறாக, அவரது வாக்குகள் விஜய்யை நோக்கி செல்லக்கூடும்.
நடிகர் விஜய்க்கு உள்ள மக்கள் செல்வாக்கை யாரோடும் ஒப்பிட முடியாது. கடந்த காலங்களில் சிவாஜி, கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு கிடைத்த ஆதரவைவிட பல மடங்கு ஆதரவு இன்று விஜய்க்கு உள்ளது. அவர் ஒரு ‘Disruptor’ அதாவது, களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவர். இந்த மாற்றத்தின் தாக்கம், தி.மு.க.வுக்கே அதிக வலியைக் கொடுக்கக்கூடும்.
விஜய்யின் எழுச்சி, காங்கிரஸுக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிக இடங்களை வேண்டி, காங்கிரஸ் தலைமை நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த முறை 25 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ், இந்த முறை அதைவிட அதிக இடங்களை கோருகிறது. இல்லையெனில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பீகாரில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அவர்கள் அதிக இடங்களை கோரலாம். மாறாக, அங்கு தோல்வியடைந்தால், தி.மு.க.வின் கை ஓங்கும்.
காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.வால் வெற்றி பெறுவது கடினம். 1989-ல் ஜெயலலிதா-ஜானகி அணிகளால் அ.தி.மு.க. பிளவுபட்டு இருந்தபோதுதான், தி.மு.க. தனியாக வென்றது. அதை தவிர, ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியுடன் மட்டுமே வென்றுள்ளது. எனவே, காங்கிரஸ் கூட்டணியை இழக்க தி.மு.க. விரும்பாது. ஒருவேளை இந்த கூட்டணி உடைந்தால், சிறுபான்மையினர் வாக்குகள் சிதறி, தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறையும்.
மொத்தத்தில் விஜய்யின் அரசியல் வருகை, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது. அவர் ஒரு டிஸ்ரப்டர், அதாவது ஏற்கனவே உள்ள அரசியல் சமன்பாடுகளை கலைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்குபவர். அவர் அமைக்கும் கூட்டணி, அவரது பிரசார உத்தி, மற்றும் மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவை பொறுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
