சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று சிலர் விமர்சித்த நிலையில், அதற்கு வலுவான பதில்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவாதம், தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
“மாநாட்டில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை” என்று விமர்சகர்கள் முன்வைக்கும் வாதம், ஒரு முரண்பட்ட கருத்தாக உள்ளது. கடந்த தேர்தல்களில் இதே இளைஞர்கள் அதிமுக அல்லது திமுகவுக்கு வாக்களித்தபோது அவர்களுக்கு அரசியல் புரிதல் இருந்தது. ஆனால் இன்று அவர்கள் த.வெ.க.வின் நிகழ்ச்சிக்கு வந்ததால் அவர்களுக்கு புரிதல் இல்லை என்று கூறுவது ஒரு தர்க்கரீதியான வாதமாக இல்லை. குறிப்பாக, மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் 21 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள். கடந்த தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும், அப்போது அவர்களின் அரசியல் புரிதலை ஏற்றுக்கொண்டவர்கள், இன்று அவர்களை புரிதல் அற்றவர்கள் என்று கூறுவது சரியானதல்ல.
மேல்லும் “50 ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்டவர்கள் யார்?” என்ற கேள்வி இங்கு முக்கியமானது. அண்ணா, பெரியார் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் கட்சிகள்தான் இந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்துள்ளன. இப்போது இந்த இளைஞர் கூட்டம் இரு திராவிட கட்சிகளின் செயல்கள் பிடிக்காததால் தான் ஒரு புதிய கட்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது. அப்படியென்றால் அது 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சிகளின் தோல்வியையை தானே குறிக்கும். அப்படியே அவர்களின் வாதப்படி ஒரு பெரிய கூட்டம், அரசியல் புரிதல் இல்லாமல் இவ்வளவு காலம் இருந்தது என்றால், அதை ஆளும் கட்சிகள் தங்கள் பொறுப்பில்லாமல் செயல்பட்டதாலேயே நிகழ்ந்ததாக கருத வேண்டும்.
விஜய் அரசியலுக்கு வந்துள்ள இந்த சூழலில், தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வு இல்லாத ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது என்ற வாதம் ஏற்புடையதல்ல. மாறாக, இந்த இளைஞர்கள் தங்கள் அரசியல் விருப்பங்களை மாற்றிக்கொண்டு, புதிய தலைமையை நாடி வருகிறார்கள் என்பதே உண்மை. இது அவர்களின் அரசியல் புரிதலின்மையைக் காட்டவில்லை, மாறாக, அவர்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டவும் இல்லை, ஓட்டு போடவும் பெரும்பாலும் வரவில்லை. காரணம், மாறி மாறி ஒரே கொள்கையுடைய கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் ஊழல் செய்வதையே குறியாக இரு கட்சிகளும் இருந்ததால் தான் இளைஞர்களுக்கு அரசியல் மீதே ஒரு வெறுப்பு ஏற்பட்டது.
இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புரட்சியான தலைவர் வரமாட்டாரா என இளைஞர்கள் பல ஆண்டுகளாக ஏங்கி வந்தனர். விஜயகாந்த் வந்தார், ஏமாற்றினார்.. கமல்ஹாசன் வந்தார், ஏமாற்றினார். சீமான் வந்தார் அவரும் இளைஞர்களின் முழு நம்பிக்கையை பெறவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய் வந்திருக்கிறார், அவரை ஒரு புரட்சித் தலைவராகவும் தமிழகத்தின் விடிவெள்ளியாகவும் இளைஞர்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் அவருக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருகிறது, அவரை முதலமைச்சர் சீட்டில் உட்கார வைக்காமல் இந்த இளைஞர்கள் விடமாட்டார்கள்’ என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
