அஜர்பைஜானில் நடைபெற்ற COP29 ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிறைவடைந்தது. திட்டமிடப்பட்ட நேரத்தைவிட 33 மணி நேரம் தாமதமாக நடைபெற்ற இந்த மாநாட்டில், காலநிலை நிதி குறித்த விவாதங்கள் கடும் மோதல்களை ஏற்படுத்தின. வளரும் நாடுகள் 1.3 ட்ரில்லியன் டாலர் நிதியை கோர, பணக்கார நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம், பல பத்தாண்டுகளாக அதிக மாசுபாட்டை ஏற்படுத்திய வளர்ந்த நாடுகள்தான். எனவே, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட வளரும் நாடுகளுக்கு நஷ்டஈடு வழங்குவது போல, நிதியுதவி அளிப்பது அவர்களின் பொறுப்பு. இந்த உச்சி மாநாட்டில், வளரும் நாடுகள் ஆண்டுக்கு 1.3 ட்ரில்லியன் டாலர் நிதி கோரின. ஆனால், கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, $300 பில்லியன் டாலர் மட்டுமே 2035 வரை வழங்கப்படும் என ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தத் தொகை, கோரப்பட்ட தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவானது. இந்த தொகை மிகமிக குறைவு மற்றும் தாமதமானது என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இந்தியாவின் பிரதிநிதி, “இந்த ஆவணம் ஒரு மாயையை தவிர வேறில்லை. இது நாம் எதிர்கொள்ளும் சவாலின் பிரம்மாண்டத்தைச் சமாளிக்காது, என்று கூறி, ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதை எதிர்த்தார். நம்பிக்கையின்மை மற்றும் குறைபாடுகள்
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு பல ஆட்சேபனைகள் இருந்தன.
$300 பில்லியன் என்பது காலநிலை மாற்றத்தை சமாளிக்கப் போதுமானதல்ல. இந்தியா இதை ஒரு மிக மிக சிறிய தொகை என்று வர்ணித்தது. இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இந்தியா தனது கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் இந்தியா குற்றம் சாட்டியது.
உலக மக்கள் தொகையில் 17% இந்தியர்கள், ஆனால் உலகளாவிய மாசுபாட்டில் இந்தியாவின் பங்கு 4%க்கும் குறைவு. இந்த தனித்துவமான நிலையில், இந்தியா ‘உலகளாவிய தெற்கின்’ குரலாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்தியா பாதிக்கப்படும் அதேவேளையில், அதற்கான நடவடிக்கைகளிலும் முன்னணியில் உள்ளது.
2015-ம் ஆண்டு பாரிஸ் உச்சி மாநாட்டில், வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு $100 பில்லியன் டாலர் வழங்குவதாக உறுதியளித்தன. ஆனால், அந்த உறுதிமொழி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது, $300 பில்லியன் என புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உண்மையான செலவு $1 ட்ரில்லியன் முதல் $1.3 ட்ரில்லியன் வரை இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு COP மாநாட்டிலும், பணக்கார நாடுகள் அதிக வாக்குறுதிகளை அளிப்பதும், ஏழை நாடுகள் காத்திருப்பதும், இறுதியில் மோசமான ஒப்பந்தங்களுடன் முடிவடைவதும் தொடர்கதையாக உள்ளது.
இன்றைய உலக சூழலில், உலக பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், காலநிலை மாற்றம் கடைசியாகவே மக்களின் மனதில் நிற்கிறது. ஆனால், காலநிலை மாற்றம் என்பது ஒரு எல்லையோ, அரசியலோ இல்லாத ஒரு விஷயம். டெல்லியில் உள்ள நச்சுக்காற்று, ஐரோப்பாவில் அதிகரித்த வெப்பம், சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புயல்கள் ஆகியவை அனைத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளே.
நமது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காக காத்திருக்காமல், பூமி தனது வழியில் தொடர்ந்து வெப்பமயமாகி வருகிறது. வெள்ளம் வரும், வெப்பநிலை உயரும், கடல் மட்டம் உயர்ந்து வாழ்விடங்களை அழிக்கும். இது வெறும் நிதி, இழப்பீடு அல்லது பேச்சுவார்த்தை பற்றியது அல்ல; இது நமது கிரகத்தின் எதிர்காலம் பற்றியது.
எலான் மஸ்க் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றம் அமைக்கும் வரை, இந்த பூமியில்தான் நாம் வாழ வேண்டும். எனவே, நாம் அனைவரும் யோசித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
