அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு குழந்தை போன்ற மனதை கொண்டவர், மனதில் பட்டதை உடனடியாக வெளிப்படுத்துபவர். இந்த இயல்பு தான், இந்திய – அமெரிக்க ராஜதந்திர உறவுகளில் சில தற்காலிக சவால்களை உருவாக்கியுள்ளது. ஹௌடி மோடி மற்றும் நமஸ்தே டிரம்ப் என்று இரு நாட்டு தலைவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே ஒருவித மனக்கசப்பு ஏற்பட்டதற்கு டிரம்பின் மனநிலை தான் காரணம்..
ஜூன் 17 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட, தானே காரணம் என சொந்தம் கொண்டாடியதாகவும், இதை இந்திய பிரதமர் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பாகிஸ்தான் தனக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ததாக டிரம்ப் கூறியபோதும், பிரதமர் மோடி அதை கடந்து சென்றது, டிரம்ப் மனதில் ஒரு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு நிகழ்வுகளும், இரு தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவில் விரிசலுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் வாங்குவது, அமெரிக்காவின் கோபத்திற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டு நியாயமற்றது. ஏனெனில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேற்று தொடங்கவில்லை. பிப்ரவரி 2022-ல் போர் தொடங்கியதிலிருந்தே இது நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் பொருளாதாரம், அமெரிக்க டாலர் சார்ந்த பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா ரூபாயில் எண்ணெய் வாங்குவது அவர்களுக்கு சாதகமாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. எனவே, இது இந்தியாவுக்கான தனிப்பட்ட பிரச்சினை அல்ல.
டிரம்ப், தனது வெளிநாட்டு கொள்கைகளை சமூக வலைத்தள பதிவுகள் மூலம் இயக்கக்கூடியவர். தனது மனதில் தோன்றுவதை எல்லாம் அவர் உலகிற்கு உடனடியாக தெரியப்படுத்துவார். அவர் ஒரு “தனி மனித முடிவெடுக்கும் மையம்” போல் செயல்படுகிறார். இது, மற்ற நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு கொள்கையுடன் ஒத்துப்போகாத ஒரு அணுகுமுறையாகும்.
அமெரிக்காவின் அணுகுமுறை காரணமாக, இந்தியா சீனாவுடன் நட்பை வலுப்படுத்திக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய வெளியுறவு கொள்கையின் வரலாற்றில், நாம் ஒரே ஒரு நாட்டுடன் மட்டுமே உறவுகளை முற்றிலுமாக துண்டித்துள்ளோம். அது சீனா. 1962 சீன படையெடுப்பிற்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 15 ஆண்டுகள் ராஜதந்திர உறவுகள் இல்லாமல் இருந்தன. பாகிஸ்தானுடன் மூன்று போர்களை நடத்தியிருந்தாலும், ராஜதந்திர உறவுகளை நாம் துண்டித்து கொண்டதில்லை.
கால்வான் மோதலுக்கு பிறகு, சீனாவுடனான விமான போக்குவரத்து கூட துண்டிக்கப்பட்டது. இருப்பினும், சீனாவுடனான உறவுகளை முழுமையாக துண்டித்துக்கொள்வது என்பது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை. உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகள் தொடர வேண்டியது அவசியம்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் டாலருக்கு மாற்றாக ஒரு புதிய நாணயத்தை உருவாக்கும் முயற்சி, டிரம்பின் கோபத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த முயற்சி உடனடியாக நிறைபெறாது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு டாலருக்கு மாற்றான ஒரு செலாவணி உருவாகும் வாய்ப்பு மிகக்குறைவு.
ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் போன்ற அமைப்புகள் பரஸ்பர நம்பிக்கையற்ற நாடுகள் ஒன்றாக செயல்படும் ஒரு அமைப்பாகும். இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எனவே, இந்த அமைப்பின் கூட்டங்களில் தலைவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்வதை கொண்டு, உறவுகள் வலுப்பெறுவதாக நாம் எளிதாக முடிவெடுக்க முடியாது. இது ஒரு காட்சி மட்டுமே.
சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஒரு ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ச்சி, சீனாவின் வளர்ச்சியை சமன் செய்ய உதவும் என அமெரிக்கா கருதுகிறது. எனவே, டிரம்ப் அல்லது அடுத்து வரக்கூடிய எந்த அதிபரும் இந்தியாவுடனான உறவுகளை சரிசெய்யும் கட்டாயத்தில் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இந்தத் தற்காலிகப் பின்னடைவு விரைவில் சரியாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
