நடிகர் விஜய், தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் பிரசார பயணத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். சென்னையிலிருந்து திருச்சிக்கு 330 கிலோமீட்டர் தூரத்தை விமானத்தில் முக்கால் மணி நேரத்தில் வந்தடைந்த அவர், திருச்சி விமான நிலையத்திலிருந்து பொதுக்கூட்ட மைதானம் வரை வெறும் 7 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்து கொண்டார். எதிர்பார்த்ததைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.
விஜய்யின் வருகையை ஓர் அரசியல் பார்வையாளராகவும், ஊடகவியலாளராகவும் பார்க்கும்போது, இது ஒரு சாதாரண நடிகர் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு மட்டுமல்ல; இது ஒரு அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு பெரிய கூட்டம், மக்களிடையே ஒரு புதிய தலைவர் மீதான நம்பிக்கையை உருவாக்குகிறது. கூடிய கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா? என்ற ஒரு கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தேர்தல் களத்தில், “இந்த கட்சிக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறதா?” ஒருவேளை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடுமோ என்ற ஒரு மனநிலையை இந்த கூட்டம் உருவாக்கும். இது, விஜய்க்கு வாக்களிக்காதவர்களையும் கூட, “இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்” என்ற எண்ணத்தை உருவாக்கி, ஒரு ‘வெற்றி மனநிலையை’ உருவாக்கும்.
விஜய்யின் பிரசாரப் பயணம் குறித்து திமுக மற்றும் அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன. குறிப்பாக, வார இறுதியில் மட்டுமே அவர் பிரசாரம் செய்வதை பலரும் விமர்சித்துள்ளனர். இது ஒரு விமர்சனமாக தோன்றினாலும், இது ஒரு ராஜதந்திரமாகவும் இருக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்வதன் மூலம், ஒரு வாரம் முழுவதும் அவர் மக்கள் மத்தியில் விவாத பொருளாக இருப்பார். இது அவரை பற்றிய செய்திகள், விவாதங்கள் தொடர்ந்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவ வழிவகுக்கும். இது மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை நிலைநிறுத்த உதவும்.
இந்த கூட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவசர மருத்துவ உதவிக்குச் செல்ல வேண்டியவர்கள், அன்றாட பணிகளைச் செய்ய வேண்டியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இது விஜய்யின் தனிப்பட்ட தவறு அல்ல; ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டுப்படுத்த தவறியது காவல்துறையின் குறைபாடே. இத்தகைய சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான வழிமுறைகளை இனிவரும் பிரசார பயணங்களில் திட்டமிடுவது அவசியம். மேலும் அடுத்த 5 வருடங்கள் தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்கள் ஒரு நல்ல ஆட்சியை பெற வேண்டுமானால் இதுபோன்ற சின்னச்சின்ன இடையூறுகளை பொறுத்துதான் ஆக வேண்டும் என மக்களே பேசி கொள்கின்றனர்.
விஜய்யின் பேச்சு கவனமாக தயாரிக்கப்பட்ட ஒன்றாக தெரிந்தது. அவர் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான கல்விக்கடன் ரத்து, மகளிர் உரிமைத்தொகை போன்றவற்றை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். ஒரு குறிப்பிட்ட கட்சியின், அது ஆளுங்கட்சியான பிறகு அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கேள்வி கேட்பது ஒரு ஆரோக்கியமான அரசியல் விமர்சனமாக பார்க்கப்படுகிறது. அதேபோல், திருச்சிக்கு சம்பந்தப்பட்ட மணல் திருட்டு, கிட்னி திருட்டு போன்ற குறிப்பிட்ட விஷயங்களைக் கையாண்டது, அவரது பேச்சிற்கு நம்பகத்தன்மையை சேர்த்துள்ளது. கிட்னி திருட்டு குறித்து சரியான நடவடிக்கை இல்லை என அதிமுக உள்பட பெரிய கட்சிகளே பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் விஜய் அதை அழுத்தமாக பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு பிரச்சினையை பொதுவானதாக பேசாமல், அந்தப் பகுதியின் குறிப்பிட்ட பிரச்சினைகளை பேசும்போது, அது மக்களின் மனங்களில் ஆழமாக பதிகிறது. இது விஜய்யின் அரசியல் புரிதல் வளர்ந்து வருவதை காட்டுகிறது.
இறுதியாக, அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் தனது பயணத்தை தொடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இது தமிழக வரலாற்றின் அரசியல் மாற்றத்தை எதிரொலிப்பதாக உள்ளது. விஜய்யின் வருகை, இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. அவருடைய பிரசார பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்கள், தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
