இசைஞானி இளையராஜாவின் சிம்பனி இசை தொகுப்பைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், இளையராஜாவின் இசைப்பயணம், அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
ரஜினிகாந்த் தனது உரையில், “ஆச்சரியமான மனிதர்களை நான் புராணங்களிலும், வரலாற்றிலும் படித்திருக்கிறேன். ஆனால், என் கண்களால் பார்த்த ஒரு ஆச்சரியமான மனிதர் இளையராஜா அவர்கள்,” என்று தொடங்கி, இளையராஜாவின் இசை உலகத்தை புகழ்ந்தார். அவர் இளையராஜாவின் 50 வருட இசைப் பயணம், 1600 படங்கள், 8000 பாடல்கள் என சாதனைகளை பட்டியலிட்டார்.
இளையராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களையும் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். ‘ராஜாதி ராஜா’ படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியபோது, படத்தின் வெற்றி குறித்து இளையராஜா தன்னம்பிக்கையுடன் கூறியது, தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாக கூறினார். “இந்த படம் சில்வர் ஜூப்லி ஓடலைனா, நான் இசையமைக்க மாட்டேன்,” என்று இளையராஜா சொன்னதை குறிப்பிட்டு, அவருடைய தன்னம்பிக்கையை ரஜினிகாந்த் பாராட்டினார்.
ரஜினிகாந்த் இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகளையும், அவற்றையும் கடந்து அவர் இசைப்பணியில் தொடர்ந்ததையும் உருக்கமாக பேசினார். தனது மனைவி ஜீவா, மகள் பவதாரணி ஆகியோரின் மறைவுக்கு பிறகும், இளையராஜா தனது இசைப்பணியை நிறுத்தாமல் தொடர்ந்தது, அவருடைய அர்ப்பணிப்பையும் மன உறுதியையும் காட்டுவதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
“இளையராஜாவின் இசை, அவர் இறந்த பிறகும்கூட வாழும்,” என்று ரஜினிகாந்த் கூறினார். மேலும், இசைக்கு இருக்கும் சக்தி குறித்துப் பேசிய அவர், இளையராஜாவின் இசை, சாதாரண மனிதர்களின் உணர்வுகளைக்கூட வெளிப்படுத்தும் வலிமை கொண்டது என்றார்.
ரஜினிகாந்த் தனது பேச்சில் மறைந்த பாடகர் எஸ் பி பி மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் குறித்தும் கூறினார். இளையராஜாவின் பாடல்கள் ராயல்டி குறித்த தீர்ப்பு வெளியான போது அமெரிக்காவில் எஸ்பிபி பாடிக்கொண்டிருந்தார் என்றும் இந்த தீர்ப்பை கேட்டவுடன் எஸ்பிபி கண்டிப்பாக எனது பாடலை பாடாமல் நிறுத்திவிடுவார், சென்னை வந்து என்னை பார்ப்பார் என்று இளையராஜா நம்பிக்கையுடன் தன்னிடம் கூறியதாகவும், அவர் சொன்னது போலவே அமெரிக்காவில் பாடிக்கொண்டிருந்த எஸ்பிபி இடம் இந்த செய்தி போனதும் அவர் இளையராஜாவின் பாடல்களை பாடவில்லை என்றும், அதேபோல் அவர் சென்னை வந்து இளையராஜாவை பார்த்தார் என்றும் அதுதான் அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு என்றும் ரஜினிகாந்த் பேசினார். திரை உலகை பொருத்தவரை இரண்டு பேரில் மறைவை வீடு செய்யவே முடியாது அதில் ஒன்று எஸ்பி, இன்னொன்று விவேக் என்று ரஜினிகாந்த் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
அதேபோல் வெற்றி தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் வெற்றி அதன் அருமை நமக்கு தெரியாது, இடை இடையிடையே தோல்வியும் வர வேண்டும். இளையராஜா மிகப்பெரிய இசையமைப்பாளராக இருந்தபோது இன்னொரு இசையமைப்பாளர் அறிமுகமானார், பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் அந்த இசையமைப்பாளர் பின் சென்றனர், ரஜினிகாந்த் கூட சென்று விட்டார் என்று தன்னையும் சேர்த்து ரஜினிகாந்த் பேசினார். அப்போதுதான் அவர் வெற்றி தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அந்த வெற்றியின் அருமை தெரியாது, இடையிடையே சில தோல்விகளும் வர வேண்டும், அப்போதுதான் அந்த வெற்றியின் அருமை தெரியும் என்று முதலமைச்சர் கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
