தமிழக பாஜகவின் தற்போதைய தலைமை குறித்து அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்று அரசியல் விமர்சகர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை போன்ற அதிரடி தலைமை இல்லாததால் கட்சிக்கு தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன், அகில இந்தியக் கட்சியாகிய பாஜகவின் தமிழகத் தலைவராக நீடிக்க தகுதியானவர் அல்ல. “இந்தப் பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல; தேர்தல் வரை அவர் நிச்சயம் நீடிக்க மாட்டார். அப்படியே நீடித்தால் அது கட்சிக்குத்தான் இழப்பு,” என்றும் சேகுவேரா தெரிவித்தார். அண்ணாமலையைப் போல அதிரடியாக செயல்படவும் இல்லை, அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் பாணியையும் அவர் கொண்டிருக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் கோபமாக பதிலளித்ததை சுட்டிக்காட்டினார். இது ஒரு தலைவருக்கான முதிர்ச்சியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தின் அரசியல் களத்தில். தி.மு.க. ஏற்கனவே தனது தேர்தல் பயணத்தை தொடங்கிவிட்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாகனத்திற்கு தற்போதுதான் எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், பாஜகவின் வண்டி இன்னும் முழுமையாக கிளம்பவில்லை.
“அண்ணாமலை தலைவராக இருந்திருந்தால், கட்சி எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும். மேலும், நயினார் நாகேந்திரன் தலைவர் அலுவலகத்திற்குக்கூட மதியம் 12 மணிக்கு வந்து 3 மணிக்கு செல்கிறார் என்றும், இது தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைவருக்கு உகந்த செயல்பாடு அல்ல என்றும் அவர் விமர்சிக்கிறார். ஒரு கட்சி தலைவர் எப்போதும் பரபரப்பாகவும், களத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அண்ணாமலை மற்றும் ஹெச். ராஜா போன்ற தலைவர்கள் அதிரடியாக செயல்பட்டு கட்சிக்கு ஒரு சலசலப்பை ஏற்படுத்தினர். ஆனால், நயினார் நாகேந்திரன் வந்த பிறகு, அந்த சலசலப்பு கூட இல்லை. ஒரு மாநில தலைவருக்கு துணிச்சல் மிக முக்கியம். உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது, சில வார்த்தைகள் தவறாகப் போகலாம். ஆனால், ஒரு கட்சிக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் கொண்ட தலைவர்களாக அண்ணாமலை மற்றும் ஹெச். ராஜா இருந்தனர் என்று சேகுவாரா குறிப்பிடுகிறார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உடனே டெல்லிக்கு சென்றது, அவர் டெல்லி பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க. தொண்டர்களுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அ.தி.மு.க. சிதைந்தாலோ அல்லது கூட்டணி உறுதியற்றதாக இருந்தாலோ, அது விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்றும், ஆனால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கணித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைமைக்கு தமிழக கள நிலவரம் குறித்த தகவல்களை குருமூர்த்தி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவர்தான் முக்கியமாக வழங்குகிறார்கள் என்று சேகுவாரா கூறுகிறார். இதில், நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் அனைத்து நரம்புகளையும் அறிந்தவர் என்றும், அவர் பார்வை இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது என்றும் அவர் உறுதியாக கூறுகிறார். அண்ணாமலை பதவி விலகியதற்குக்கூட நிர்மலா சீதாராமனின் கவனிப்பு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் நேரடியாக அமித் ஷா அல்லது நட்டாவைச் சந்திக்க முடியாது என்றும், இங்குள்ள நிலவரங்கள் நிர்மலா போன்றவர்கள் மூலம்தான் டெல்லிக்கு செல்கின்றன என்றும் அவர் விளக்குகிறார்.
மொத்தத்தில் பாஜக சரியான தலைமை இல்லாமல் தத்தளிக்கிறது, அதிமுகவும் ஒருங்கிணைப்பு இல்லாமல் திணறுகிறது. இந்த இரண்டும் தவெகவுக்கு சாதகமாக இருப்பதால் திமுகவுக்கு சவால் அளிக்கும் ஒரே கட்சி தவெக தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
