அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்ந்தால், அதற்கான கூடுதல் செலவை நாங்கள் பட்டியல் இடுவோம்” என அமேசான் வெளிப்படையாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, உலகளாவிய வணிகத்தின் முதுகெலும்பையே மாற்றியமைக்க தொடங்கிய ஒரு அமைதியான புயலின் அறிகுறியாக இருந்தது.
ஒரு வீட்டு உபயோக பொருளை வாங்க நீங்கள் இணையதளத்திற்குள் நுழைகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அதன் விலை, அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளால் அதிகமாக உள்ளது என்று தெரிந்தால் எப்படி இருக்கும்? 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு வர்த்தக கொள்கையை வெளியிட்டது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்ட அதிரடி வரிகள், நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தின.
இந்த வர்த்தகப் புயலுக்கு மத்தியில், அமேசான் தனது சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதற்காக ஒரு பெரிய மறுசீரமைப்பை தொடங்கியது. இது போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், உலகெங்கிலும் பொருட்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதில் ஒரு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தியது.
2025 ஏப்ரலில் அதிர்ச்சி தொடங்கியது. அமெரிக்காவிற்குள் நுழையும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் 10% அடிப்படை வரியை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது வெறும் அடையாளப்பூர்வமான நடவடிக்கை அல்ல. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமான சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 145% என்ற வியக்கத்தக்க உயர்ந்த வரி விதிக்கப்பட்டது. இது ஒரு பொருளாதாரப் போர் என்று வர்ணிக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை மின்னணுவியல் முதல் ஆடைகள் வரை அனைத்து தொழில்துறைகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் விலையேற்றத்தை, நிறுவனங்களால் சமாளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியது. பத்தாண்டுகளாக உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட விநியோக சங்கிலிகள் ஒரே இரவில் குழப்பத்தில் சிக்கின. அமெரிக்க மின்னணு வர்த்தகத்தில் சுமார் 40% ஆதிக்கம் செலுத்தும் அமேசான், அதன் வரலாற்றில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது.
தன்னுடைய குறைந்த விலை மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பெருமை கொண்டிருந்த அமேசானின் வர்த்தக அடிப்படைக்கே இந்த வரிகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின. ஆசியாவில் அதிக கவனம் செலுத்தியிருந்த அதன் சப்ளையர் நெட்வொர்க் திடீரென ஒரு சுமையாக மாறியது. இதனால், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற அன்றாட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், அமேசானுக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன – ஒன்று, பில்லியன் கணக்கான டாலர் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விலைகளை நிலையாக வைத்திருப்பது அல்லது நுகர்வோருக்கான செலவுகளை உயர்த்தி, அதன் போட்டித் திறனை இழப்பது. இரண்டு வழிகளும் நீண்ட காலத்திற்கு நிலையானதாக இல்லை.
இந்த சூழலில், அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகள் உடனடியாக பெரும் மறுசீரமைப்பை தொடங்கினர். தங்கள் விநியோக சங்கிலி ஒப்பந்தங்களில் இருந்து 13 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வேறு இடங்களுக்கு மாற்றி, நிறுவனத்தை காப்பாற்றினர். இது ஒரு சிறிய மாற்றம் அல்ல. இது உலகளாவிய தளவாட அமைப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம். சீன தொழிற்சாலைகளுடன் இருந்த ஒப்பந்தங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்ட. புதிய ஒப்பந்தங்கள் அமெரிக்க வர்த்தக கொள்கைகளால் பாதிக்கப்படாத பிராந்தியங்களில் உருவாக்கப்பட்டன. மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகியவை அமேசானின் புதிய விநியோக நெட்வொர்க்கில் முக்கிய இடத்தைப் பிடித்தன. குறைந்த உற்பத்தி செலவுகள் மற்றும் குறைவான வரிக் கட்டுப்பாடுகள் இவர்களுக்கு உதவியாக இருந்தன.
ஒருபுறம், அமேசானின் கப்பல் போக்குவரத்து, விநியோக மையங்கள் மற்றும் சரக்குக் கிடங்குகள் ஆகியவற்றில் அமெரிக்கத் துறைமுகங்களும், சாலைகளும் இந்த மாற்றத்தால் ஸ்தம்பித்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்கள் வழியே வரும் சரக்குகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், துறைமுக தொழிலாளர்கள், ட்ரக் ஓட்டுநர்கள் மற்றும் கிடங்கு ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டது.
அமேசான் ஆரம்பத்தில் அதிக செலவுகளை சமாளிக்க முயற்சித்தது. இருப்பினும், பொருட்களின் விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாக மாறியது. 2026-ன் தொடக்கத்தில், மின்னணுவியல், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் 10 முதல் 20% வரை விலை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இது நுகர்வோர் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு ஒரு புதிய, கடுமையான யதார்த்தத்தை உருவாக்கியது.
அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கொள்கைகள், இறுதியில் அமெரிக்க நுகர்வோரையே பாதித்தன. அமெரிக்காவில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாமில் உள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் செழிப்பு கிடைத்தது.
மொத்தத்தில், இந்தச் சம்பவம் ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், இறக்குமதிகளை தடுக்க வடிவமைக்கப்பட்ட கொள்கைகள், சுவர்களை முற்றிலும் தவிர்த்து செல்லும் எதிர்வினைகளைத் தூண்டக்கூடும். அமேசான் போன்ற பெரிய மற்றும் வளங்கள் நிறைந்த நிறுவனங்கள், அரசியல் முடிவுகளின் அழுத்தத்தின் கீழ் வளைந்தாலும், ஒருபோதும் உடைவதில்லை. மாறாக, அவை புதிய வழிகளை உருவாக்குகின்றன. இது அமெரிக்காவின் வர்த்தக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கிப் பொருளாதார சக்தியை நகர்த்தும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
