இனி தங்கம் தான் சர்வதேச நாணயம்.. முடிந்தது டாலர் ஆதிக்கம்.. இந்தியாவின் யோசனையை வழிமொழியும் உலக நாடுகள்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக வங்கிகள்.. தங்கம் விலை மிக உச்சமாக செல்ல வாய்ப்பு..!

பொதுவாக மனிதர்களின் நடவடிக்கை சிக்கலானது என்று சொல்வார்கள். குறிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிதியியல் உலகமோ இன்னும் சிக்கலானது. உலகிலேயே முதன்முதலில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயம் தங்கம் தான். அதன்பின்னர் தான் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு…

gold

பொதுவாக மனிதர்களின் நடவடிக்கை சிக்கலானது என்று சொல்வார்கள். குறிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிதியியல் உலகமோ இன்னும் சிக்கலானது. உலகிலேயே முதன்முதலில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயம் தங்கம் தான். அதன்பின்னர் தான் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என தனி கரன்சி வழிவகுத்து கொண்டன. இந்த நிலையில் உலக அளவில் பரிமாற்றம் செய்வதற்கு மீண்டும் தங்கம் ஒரு நாணயமாக கருதப்படும் நிலை விரைவில் வரும் என கருதப்படுகிறது. எனவே தான் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய சக்தி யார்? வேறு யாருமல்ல, உலக மத்திய வங்கிகள்தான்.

உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) அறிக்கையின்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உலக மத்திய வங்கிகள் 10 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், அவை சுமார் 3,264 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளன. குறிப்பாக, 2022-ல் 1,082 டன்கள், 2023-ல் 1,37 டன்கள், மற்றும் 2024-ல் 1,045 டன்கள் என வரலாறு காணாத அளவில் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா, இந்தியா, மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியுள்ளன. துருக்கியும் சமீப காலமாக கணிசமான அளவில் தங்கத்தை வாங்கி வருகிறது.

1990-களுக்கு பிறகு முதன்முறையாக, மத்திய வங்கிகள் அமெரிக்க அரசு பத்திரங்களை (US government bonds) விட அதிக அளவில் தங்கத்தை கையிருப்பு வைத்துள்ளன. இந்தியாவில், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிலவரப்படி $1.7 பில்லியன் அதிகரித்து, மொத்தமாக $86.76 பில்லியனாக உயர்ந்துள்ளது.

உலக மத்திய வங்கிகள், ஒரு காலத்தில் மிகவும் பாதுகாப்பான சொத்தாக கருதப்பட்ட அமெரிக்க பத்திரங்களை விற்றுவிட்டு, தங்கத்தை வாங்க தொடங்கியதற்கு பின்னால் நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யாவின் டாலர் மற்றும் யூரோ கையிருப்புகள் முடக்கப்பட்டன. இதனால், ஒரு நாட்டின் கையிருப்பை முடக்க முடியாத ஒரு நாணயம் வேண்டும் என்று பிற நாடுகள் விரும்புகின்றன. தங்கம் ஒரு நிலையான, அரசியல் தடைகளை தாண்டி செயல்படக்கூடிய சொத்து. அமெரிக்கா அதன் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும், உலகளாவிய வர்த்தகத்திலிருந்து நாடுகளைத் தடை செய்வதற்கும், தங்கத்தை ஒரு சிறந்த மாற்று வழியாக நாடுகள் கருதுகின்றன.

இரண்டாவது அமெரிக்கா தொடர்ந்து அதிக கடன் வாங்கி வருகிறது. மத்திய வங்கிகள் தங்களது முழு பாதுகாப்பையும் அமெரிக்காவின் கடனுடன் இணைக்க விரும்பவில்லை. 1971-ல் டாலர் தங்கத்துடன் இருந்த தொடர்பை அமெரிக்கா துண்டித்ததிலிருந்து, அந்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1960 முதல் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு 78 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாவது முதலீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டாம்” என்று புரிதல் காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் முதலீடுகளை டாலர், யூரோ மற்றும் தங்கம் என பிரித்து வைக்க திட்டமிட்டுள்ளன.

நான்காவதாக உலகெங்கும் அதிகரித்து வரும் போர்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகவும், உலக பொருளாதாரம் சீர்குலைந்தாலும் பயன்படுத்தக்கூடிய ஒரு நாணயமாகவும் கருதப்படுகிறது.

கடந்த வாரம், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $3600-ஐ எட்டியது. இந்த ஆண்டு மட்டும் தங்கம் 37% விலை அதிகரித்துள்ளது. 2024-ல் அது 27% அதிகரித்திருந்தது. உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற நிலை தொடரும் வரை, இந்த தங்கம் விலை உயரும் போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.