தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் முதலில் ரஜினிகாந்த், விஜய், அஜித் என பலரும் ஞாபகத்துக்கு வருவார்கள். இதே போல, நடிப்பு, அதில் வெவ்வேறு நுணுக்கங்களை வெளிக்காட்டுதல் என எடுத்துக் கொண்டால் கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் என பலருக்கும் முக்கிய இடமுண்டு.
இதில் நடிப்பு மட்டுமில்லாமல் அதில் வரும் கதாபாத்திரங்களுக்காகவும் அதிக மெனக்கடலை மேற்கொள்பவர் தான் விக்ரம். ஆரம்பத்தில் பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக மிகவும் கஷ்டப்பட்டு சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து பின்னர் சேது மூலம் நடிகன் என்ற அந்தஸதை பெற்றவர் தான் விக்ரம். முதல் படத்திலேயே நடிப்பில் வேறொரு பரிமாணம் கட்டி மிரட்டிய விக்ரம், அடுத்தடுத்து காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், கமர்சியல் அதிகம் நிறைந்த தூள், தில், ஜெமினி, சாமி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
விக்ரமின் சறுக்கல்
ஒரு காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு நிகராக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கொண்டே இருந்த விக்ரமின் திரை பயணத்தில் திடீரென ஒரு சறுக்கல் உருவானது. அந்நியனுக்கு பிறகு இதுவரை சுமார் 20 படங்கள் வரை நடித்துள்ள விக்ரம், அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஹிட் படங்களை தான் கொடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் விக்ரமின் நடிப்பு கொண்டாடப்பட்டாலும் பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்ததால் அது விக்ரமுக்கு தனி வெற்றியாக அமையவில்லை. கடைசியாக வெளியான தங்கலான் மற்றும் வீர தீர சூரன் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இனி வரும் நாட்களில் மிக கவனமாக அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போடும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதிலும் விக்ரமின் பங்கு பெரிதாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நேரம் சரியில்ல போல
இதனிடையே தான், 96, மெய்யழகன் என தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய படைப்புகளை உருவாக்கிய இயக்குனர் பிரேம் குமாரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரேம் குமார், அடுத்ததாக பஹத் பாசிலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

மேலும், விக்ரமுடன் தான் இணைய உள்ள திரைப்படம் தள்ளிப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே மண்டேலா, மாவீரன் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்திலும் விக்ரம் நடிப்பதாக அறிவிப்பு வெளியாக, அதன் பின்னர் அது பற்றி எந்த தகவலும் இல்லை.
ரசிகர்களின் ஏமாற்றம்
இதே போல, முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்ற பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் விக்ரம் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது பற்றியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. விக்ரமிற்கு தொடர்ந்து ஹிட் படங்கள் வேண்டுமென்ற நிலையில், பிரேம்குமார், மடோனே அஸ்வின், ராம்குமார் பாலகிருஷ்ணன் என நம்பிக்கையான இயக்குனர்கள் கூட்டணி தொடர்பான தகவலும் மங்கிப் போவது நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்..
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

