அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்துவேன் என்று அவர் சமீபத்தில் ஒரு சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வரிவிதிப்பால் இந்தியாவை கட்டுப்படுத்த முடியாது என்றும், மோடியின் வலிமை குறித்தும் அவர் புரிந்து கொண்டதாக தெரிகிறது.
ட்ரம்ப்பின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடி உடனடியாக பதிலளித்துள்ளார். “இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையாக அமைந்த நட்பு நாடுகள். வர்த்தக தடைகளை நீக்க டொனால்ட் ட்ரம்புடன் பேச நானும் தயாராக இருக்கிறேன். இரு நாடுகளும் இணைந்து, இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபடுவோம்” என்று மோடி ட்ரம்ப்பின் பதிவுக்கு பதிலளித்துள்ளார்.
டிரம்ப் திடீரென இறங்கி வந்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு முக்கிய காரணம் உண்டு. கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வில், ட்ரம்ப் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் வழங்கக் கூடாது என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், “இந்தியா இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களால் இயங்க முடியாது” என்று ட்ரம்ப்புக்கு மறுப்பு தெரிவித்தனர். நம்முடைய நாட்டின் நிறுவனங்களே நம் பேச்சை கேட்கவில்லை என்றவுடன் தான் டிரம்புக்கு ஞானோதயம் உதித்தது. இனிமேல் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது என்று அவர் முடிவுக்கு வந்திருக்கலாம்.
இந்த நிகழ்வுக்கு பிறகு, இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்ட இந்திய ஆதரவு வியூக வல்லுநரான ஜேசன் மில்லர், ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜேசன் மில்லர், ட்ரம்ப்பின் நீண்டகால நண்பரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். 2016, 2020 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பணியாற்றியவர். மில்லரின் பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் ட்ரம்ப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தின் மூலம், மோடியின் அரசாங்கம் அமெரிக்க அதிபரின் முடிவுகளை மாற்றும் அளவிற்கு திறமையான ராஜதந்திரிகளை கொண்டிருக்கிறது என்பது வெளிப்பட்டுள்ளது. வெளி உறவுகளில் இந்தியா தோல்வி அடைகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்த நிகழ்வுகள் முறியடித்துள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
