அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திடீரென டெல்லி சென்று பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்ததாக கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, மறுபுறம் செங்கோட்டையனை சந்தித்தது, இருதரப்பு முரண்பாடாக பார்க்கப்படுகிறது. இதனால், பாஜகவின் உண்மையான ஆதரவு யாருக்கு என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, பாஜக ஒரு மாநிலத்தில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும். அதேபோல், தமிழகத்தில் செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராகவும், பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியும் என்ற நிபந்தனையுடன், அதிமுகவில் பிளவை ஏற்படுத்த பாஜக திட்டமிடலாம். இரட்டை இலை சின்னத்தை முடக்குவது அல்லது செங்கோட்டையன் பக்கம் அதிமுக தலைவர்களை இழுப்பது போன்ற வியூகங்களையும் பாஜக பயன்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக பலவீனமடையும் என பாஜக கருதலாம்.
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒரு கட்சியை உடைத்து வெற்றி பெற முடியும். ஆனால், தமிழகத்தில் இது சாத்தியமில்லை என்றும், அதிமுக உடைந்தால் அதன் வாக்குகள் திமுகவுக்கு எதிராக மற்றொரு கட்சிக்குத்தான் செல்லும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உடைந்த அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அரசியல் குழப்பத்தின் காரணமாக, அதிமுக தொண்டர்களின் வாக்குகள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்காமலேயே, அதிமுகவின் வாக்குகளை விஜய் பெறுவது, அவருக்கு ஒரு “டபுள் ஜாக்பாட்” ஆக அமையலாம்.
விஜய் தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை, வரும் 2026 தேர்தல் கண்டிப்பாக திமுகவுக்கும் தவெகவுக்கு இடையில் தான் இருக்கும் என்றும், இதில் வெற்றி பெறுவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
