அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் புதிய வர்த்தக தடைகளால் உலக அளவில் ஒரு “கச்சா எண்ணெய் போர்” தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, இந்தியா தனது எண்ணெய் கொள்முதலில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் 50% கூடுதல் வரி விதித்தது. இதில் 25% வரி, உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி அளிப்பதாக கூறி விதிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், எந்த நாட்டில் மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்குவோம் என திட்டவட்டமாக தெரிவித்தது.
டிரம்ப்-ன் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (IOC), தனது கச்சா எண்ணெய் கொள்முதல் உத்தியை மாற்றி அமைத்துள்ளது. சமீபத்தில், அமெரிக்க எண்ணெய்க்கு பதிலாக நைஜீரியாவிடம் இருந்து 2 மில்லியன் பேரல்களையும், அபுதாபியிடம் இருந்து 1 மில்லியன் பேரல்களையும் வாங்கியுள்ளது.
இது, இந்தியா தனது எண்ணெய் ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதை காட்டுகிறது. இதன் மூலம், நைஜீரியா, அங்கோலா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய சந்தையில் நுழைய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த மே மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கோலா அதிபர் லொரென்சோவை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி மற்றும் உறவுகளை ஆழப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா ஏற்கனவே அங்கோலாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குபவர்களில் ஒரு நாடாக உள்ளது. 2023-ல் அங்கோலாவிலிருந்து இந்தியாவுக்கு $2.5 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது, இது சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஏற்றுமதியாகும். அங்கோலா, நைஜீரியாவுடன் இணைந்து, ஆப்பிரிக்காவில் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.
நைஜீரியா, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான டாங்கோட் சுத்திகரிப்பு ஆலையை கொண்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தி சார்புநிலையை கணிசமாக குறைத்துள்ளது. இந்த ஆலை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பெட்ரோல் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு வேடிக்கையான முரண்பாடு என்னவென்றால், நைஜீரியா இந்தியாவுக்கு எண்ணெய் விற்றாலும், டாங்கோட் சுத்திகரிப்பு ஆலை அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஆப்பிரிக்க நாடுகள் அதிக வர்த்தக தடைகள் மற்றும் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது டிரம்ப்-ன் வர்த்தகப்போர், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. உலக வர்த்தகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களால், இந்தியா போன்ற நாடுகளுக்கு நம்பகமான ஒரு வர்த்தக பங்காளியாக ஆப்பிரிக்கா தன்னை நிலைநிறுத்தி கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
