நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜய்யின் சுற்றுப்பயணம் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து தொடங்குவது சரியான பொருத்தம் என்று கூறப்படுகிறது. இது தமிழக மக்களின் உணர்வுகளுடன் கலந்த ஒரு பயணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை சந்திப்பது, அவர்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்பது ஆகியவை ஒரு அரசியல் தலைவருக்கு மிக முக்கியம். இதை விஜய் சரியாக செய்தால் வெற்றி நிச்சயம், ஆட்சி நிச்சயம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், மதுரை மாநாட்டில் அவர் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரச்சனையையும் பேசாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம், ஆணவ கொலைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றி பேசாதது, அவரது அரசியல் நிலைப்பாட்டின் மீது கேள்விகளை எழுப்பியது.
விஜய் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி பரவலாக பேசப்படுகிறது. தற்போது, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், போன்ற தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால், இவர்களை கூட்டணியில் சேர்த்தால் கட்சியின் நேர்மை கேள்விக்குறியாகும் என்றும், அது விஜய்யின் “ஊழல் ஒழிப்பு” கொள்கைக்கு எதிராக அமையும் என்றும் சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். போன்றோரின் அரசியல் வரலாறு விஜய்யின் புதிய, நேர்மையான அரசியலுக்கு தடையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், அரசியல் அனுபவம் மற்றும் மக்கள் செல்வாக்கு இல்லாத இந்த தலைவர்களுக்கு, விஜய்யின் பக்கம் திரும்புவது ஒரு தவிர்க்க முடியாத தேர்வாக உள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், விஜய்யின் கட்சிக்கு டி. ராஜேந்தர், அவரது மகன் சிம்பு போன்றவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்றும் இது கூட்டணியை விட பெரிய பலத்தை கொடுக்கும் என்றும் பேசப்படுகிறது.
“விஜய் ஒரு கேரவன் அரசியல்வாதி, மக்களை சந்திப்பதில்லை” என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, விஜய் தனது சுற்றுப்பயணத்தின்போது நேரடியாக தொண்டர்களின் வீடுகளில் தங்கினால், அது எம்ஜிஆரைப் போல அவரது பிம்பத்தை மேலும் உயர்த்தும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
எதிர்க்கட்சிகள் விஜய்யின் பயணத்துக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்றாலும், மக்களிடையே உள்ள அவரது செல்வாக்கு, இந்த தடைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கூட்டம் ஓட்டுகளாக மாறாது” என்ற விமர்சனங்கள் இருந்தாலும், சொந்த செலவில் ஒரு மாநாட்டுக்குச் செல்லும் ரசிகர்கள், தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு மாநாட்டில் 10 லட்சம் பேரை கூட்ட முடிந்த விஜய்யால் 2 கோடி வாக்குகளை பெற முடியாதா? என்ற கேள்வியும் எழுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
