சர்வதேச அரசியல் சூழலில் அமெரிக்கா-சீனா-ரஷ்யா, இஸ்ரேல்-ஈரான், ரஷ்யா-உக்ரைன் போன்ற பல்வேறு நாடுகளுக்கு இடையே சமநிலையான உறவை இந்தியா பேணி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு, சிக்கலானதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது ஒருபுறம் விமர்சனங்களை முன்வைத்தாலும், மறுபுறம் பிரதமர் மோடியை ஒரு “சிறந்த நண்பர்” எனப் புகழ்வது இந்த உறவின் சிக்கலான, குழப்பமான தன்மையை காட்டுகிறது.
டிரம்ப் பலமுறை, “இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் இந்தியாவுக்கு எதிராக 50% வரி விதித்தோம்” என்று கூறியுள்ளார். ஆனாலும், “மோடியுடன் எப்போதும் நல்ல உறவு இருக்கும்” என்று அவர் தெரிவித்து வருகிறார். டிரம்ப் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருப்பதுபோல தோன்றினாலும், அவர் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவது, ஒரு உறுதியான காரணத்தை கண்டறிய முடியாமல் உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா, சீனா, உக்ரைன், இஸ்ரேல், மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் இந்தியா சமநிலையான உறவை பேணி வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், இரு நாடுகளுடனும் நல்லுறவை பேணுகிறது. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடிக்கு சுமுகமான உறவு உள்ளது. அதேசமயம், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியும் இந்தியாவின் நட்பை பாராட்டுகிறார். இந்தியா இந்த இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க ஒரு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று பல உலக நாடுகள் நம்புகின்றன.
கால்வான் மோதலுக்கு பிறகு நீண்ட காலம் முடங்கி கிடந்த இந்தியா-சீனா உறவு, இப்போது மீண்டும் மேம்பட்டு வருகிறது. சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இது, அமெரிக்காவுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியையும் இந்திய-இஸ்ரேல் உறவையும் எப்போதும் நேர்மறையாக பார்க்கிறார். அதேபோல் இஸ்ரேலுக்கு எதிராக உள்ள ஈரான் நாட்டுடனும் இந்தியா தனது நல்லுறவை அமைதியாக பேணி வருகிறது.
மொத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பே தனது நண்பர் மோடி என்று சொல்லி வருவதும், புதின், மோடி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதும் ஆச்சரியமான ஒன்று. உலகில் எந்த ஒரு நாடும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் நெருக்கமான ஒரு நாடாக இருந்ததில்லை, இருக்க போவதும் இல்லை. இந்தியா மட்டுமே விதிவிலக்கு.
அதேபோல் எந்தவொரு உலக வல்லரசுக்கும் அச்சுறுத்தலாக இல்லாமல், எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியாமல், ஒரு நடுநிலை நிலைப்பாட்டை உறுதியாக பின்பற்றி வருகிறது. இந்த “அமைதியான ஆக்கிரமிப்பு” அணுகுமுறை மூலம், இந்தியா உலக அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. இது, பிற நாடுகளின் மிரட்டல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சுயசார்பான கொள்கைகளை வகுக்கும் இந்தியாவின் இராஜதந்திரத்தை காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
