“வீட்டை விட்டு வெளியே வாங்க, பனையூரை விட்டு வெளியே வாங்க”, “ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் பண்றீங்க” என பல்வேறு விமர்சனங்கள் விஜய் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுக்க் எல்லாம் பதிலளிக்கும் விதமாக, விஜய் இப்போது நேரடியாக மக்களை சந்திக்க தயாராகிவிட்டார். தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பில், திருச்சியில் இருந்து தனது மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்க இருக்கிறார்.
இதுவரை பொதுவெளியில் அதிகம் தென்படாத விஜய், சில முக்கிய நிகழ்வுகளான நூல் வெளியீடு மற்றும் பட விழாக்கள் போன்றவற்றுக்கு மட்டுமே சென்று வந்தார். இது, “மக்கள் சந்திப்பு உங்களுக்கு அலர்ஜியா?” என்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால், விஜய் இந்த பேச்சுகளை எல்லாம் பொருட்படுத்தாமல், தனது அரசியல் பாதை தனக்கே தெரியும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அரசியல் நோக்கர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் ஒரு அரசியல் தலைவர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ராகுல் காந்திக்கு இதேபோல் தான் “பப்பு” மற்றும் “பிராய்லர் கோழி” போன்ற விமர்சனங்கள் வந்தபோது, அவர் இந்தியா முழுவதும் நடைப்பயணத்தை தொடங்கி தனது மீதான விமர்சனத்தை மாற்றியமைத்தார். அதேபோல, விஜய்யின் இந்த பயணம், அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தனது முதல் மக்கள் சந்திப்ப் பயணத்தை வருகிற 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கவிருக்கிறார். இதற்கான அனுமதியை கோரி திருச்சி காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி, டெல்டா பகுதியின் மையமாக இருப்பதால், அந்த மண்டலத்தில் தனது செல்வாக்கை மதிப்பிடவும், மக்களின் வரவேற்பை அறியவும் விஜய் விரும்புகிறார்.
விஜய்யின் இந்த பயணத்திற்காக, ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகள், அரசின் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள், மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்ட விதம் குறித்த தகவல்களை திரட்ட வேண்டும். கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் தங்கள் தொண்டர்களை பெயரிட்டு கூப்பிட்டது போல, விஜய் மாவட்டத் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவார் என தெரிகிறது. இது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும்.
விஜய்யின் இந்தப் பயணம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, டெல்டா பகுதியில் உள்ள திமுகவின் கோட்டையில் விஜய் களமிறங்குவது, திமுக கூட்டணிக்குள் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, விஜய்க்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. பிளவுபட்ட அதிமுகவின் வாக்குகள் சிதறும்போது, அவை விஜய்யின் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்பது பெரிய கேள்வி. அண்ணாமலை போன்ற தலைவர்கள் விஜய்யின் மக்கள் செல்வாக்கை புகழ்ந்து பேசுவதால், எதிர்காலத்தில் ஒரு பெரிய கூட்டணி அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், விஜய்யின் இந்தப் பயணமே 2026 தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் என்று நம்பப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
