அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘வரிவிதிப்பு’ என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து அதை பிற நாடுகளுக்கு கொடுப்பதை ஒரு சிறப்பு பரிசாக கருதுகிறார். இப்போது திடீர் திருப்பமாக அவரது சமீபத்திய கவனம், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படும் சிப்கள் என்று சொல்லக்கூடிய செமிகண்டக்டர்கள் மீது திரும்பியுள்ளது. நவீன உலகின் அனைத்து சாதனங்களான போன்கள், கார்கள், குளிர்பதன பெட்டிகள், ஏன் ஸ்மார்ட் பற்கள் துலக்கும் பிரஷ்கள் கூட சிப்களால் தான் இயங்குகின்றன. வரும் காலங்களில் இந்த சிப்கள் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிடும்.
அதனால் தான் டிரம்ப் மற்ற நாடுகளிடம் “சிப்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்தால், உங்களுக்கு பாதுகாப்பு. வேறு எந்த நாட்டிலும் உற்பத்தி செய்தாலும் பெரும் வரிகளை அதாவது 100% வரிகள்கூட விதிக்கப்படலாம் எதிர்கொள்ள நேரிடும் என்று இந்தியாவை அவர் மறைமுகமாக கூறுகிறார். அவரது பேச்சில் மிகைப்படுத்தல் இருந்தாலும், அவர் இந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் டிரம்ப், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தார். அந்த கூட்டத்தில் டிரம்ப் நடுவில் அமர்ந்திருக்க, அவருக்கு ஒருபுறம் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், மறுபுறம் மெட்டா நிறுவனத்தின் மார்க் சக்கர்பர்க் ஆகியோர் இருந்தனர். மேலும், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் நிறுவனத்தின் செர்ஜி பிரின் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த கூட்டம், உலகை காப்பாற்றுவதற்காக கூடிவரும் அவெஞ்சர்ஸ் போல தோன்றினாலும், அவர்கள் அனைவரும் டிரம்பின் ஆதரவைப் பெறுவதற்காகக் கூடினர். ஒவ்வொரு சிஇஓ-வும் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுக்கும், வணிகங்களுக்கு ஆதரவான அவரது நிலைப்பாட்டிற்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பு, ஒரு கொள்கை விவாதமாக இல்லாமல், டிரம்புக்கு ஆமாம்சாமி போடும் ஒரு கூட்டத்தை போலவே இருந்ததாக விமர்சனம் செய்யப்படுகிறது.
ஆனால் இந்த கூட்டத்தில் இல்லாத ஒரே முக்கியப் புள்ளி, உலகின் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் ஆவார். தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு பிரதிநிதியை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன் டிரம்ப் மற்றும் மஸ்க் இடையே ஒரு பகிரங்கமான மோதல் நடந்தது. அதன் பின்னர் இருவரும் தனித்தனியே சென்றுவிட்டனர். எனவே, மஸ்க்கின் வருகை இல்லாமல் போனது, அவரது நிலையை மேலும் உறுதிப்படுத்தியது.
சிப்கள் அல்லது செமிகண்டக்டர்கள் வெறும் மின்னணு சாதனங்களின் பாகங்கள் மட்டுமல்ல. அவை தேசிய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் ஆதிக்கத்திற்கான ஒரு கருவியாக மாறிவிட்டன. பல ஆண்டுகளாக, அமெரிக்கா சிப் உற்பத்தியை மீண்டும் தனது நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.
செமிகண்டக்டர்கள் உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வரும் நிலையில் டிரம்ப் கூடிய இந்த கூட்டம், இந்தியாவை பார்த்து அஞ்சி நடுங்குவதாக தான் சர்வதேச வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்,
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
