மலாக்கா நீரிணை (Malacca Strait) என்பது இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையே உள்ள ஒரு குறுகிய கடல் பகுதி ஆகும். இது இந்திய பெருங்கடலையும் தென் சீன கடலையும் இணைக்கும் ஒரு முக்கியமான சர்வதேச வர்த்தக பாதையாகும். உலகின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 40% இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. கப்பல் போக்குவரத்து மட்டுமின்றி, இணைய கேபிள்கள் மற்றும் விமான போக்குவரத்துக்கும் இது ஒரு முக்கிய இடமாக உள்ளது.
இந்த நீரிணை பாதுகாப்புக்காக, மலாக்கா நீரிணை ரோந்து (Malacca Straits Patrol) என்ற கூட்டு முயற்சி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. சமீபத்தில், சிங்கப்பூர் பிரதமரும் இந்தியப் பிரதமரும் சந்தித்து பேசியபோது, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவும் பங்குபெற வேண்டும் என்ற தனது ஆர்வத்தை இந்தியா வெளிப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஆதரவு தெரிவித்துள்ளது, இது சரவதேச அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.
இந்தியாவின் இந்த ஆர்வம் புதிதல்ல. பல ஆண்டுகளாகவே, மலாக்கா நீரிணையின் பாதுகாப்பில் இந்தியா ஒரு பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்கான முக்கியக் காரணங்கள் சில உள்ளன. அதுகுறித்து தற்போது பார்ப்போம். முதலாவதாக இந்தியாவின் கணிசமான வர்த்தகம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இதனால், இப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும். இரண்டாவதாக மலாக்கா நீரிணை, இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எந்தவொரு எதிரி நாடும் அந்தமான் கடலில் ராணுவ வசதிகளை ஏற்படுத்தினால், அது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, இந்த நீரிணையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம்.
மூன்றாவதாக இந்திய பெருங்கடலை அமைதியானதாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. மலாக்கா நீரிணை பாதுகாப்பை மேம்படுத்துவது, இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கும் உதவும். இந்த பகுதியில் இந்தியா, ஒரு முக்கிய நாடு என்பதையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு பொறுப்பான பங்காளியாக செயல்பட விரும்புவதையும் இந்த நகர்வு மூலம் உணர்த்துகிறது.
மலாக்கா நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய, மலாக்கா நீரிணை ரோந்து (MSP) கடல் ரோந்து, ஆகாய ரோந்து, உளவுத்துறை பரிமாற்றக்குழு என மூன்று முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் விரைவாகவும், திறம்படவும் பதிலளிக்க முடிகிறது.
சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், தனது இந்திய பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதே நேரத்தில், மலாக்கா நீரிணை பாதுகாப்பு பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த விவாதத்தின் விளைவாக, மலாக்கா நீரிணை ரோந்து நடவடிக்கைகளில் இந்தியாவுக்கும் ஆர்வம் இருப்பதையும், இந்தியா ஒரு அண்டை நாடாக இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதையும் சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டது. சிங்கப்பூர் போலவே மற்ற நாடுகளும் ஏற்று கொண்டால் மலாக்கா நீரிணை ரோந்தில் இந்தியாவும் விரைவில் சேர வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பை பெறும். இது ஏற்கனவே இந்தியா மீது கடுப்பில் இருக்கும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.
இந்தியா இந்த பாதுகாப்பு அம்சத்தில் இணைந்தால் அமெரிக்கா,ஐரோப்பாவால் எதுவும் செய்ய முடியாது என்பதும் முக்கியமானது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
