இந்தியா உட்பட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக, இந்தியா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக இருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வரிவிதிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து ஜவுளி, ஆபரணங்கள், படுக்கை விரிப்புகள், மீன் பொருட்கள், மின்னணு பொருட்கள், மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டிருப்பது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையாகும்.
இந்தியாவுக்கு தங்கள் நாட்டின்விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தியா இதனை ஏற்க மறுத்துவிட்டது.
வரி இல்லாமல் அமெரிக்கப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த உள்நாட்டு விவசாய பொருளாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டே இந்தியா இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்த வரிவிதிப்பால், குறுகிய காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 45 பில்லியன் டாலர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பல துறைகளில் வேலை இழப்புகள் ஏற்படலாம். ஆனால் இதுவொரு குறுகிய கால பாதிப்பு தான்.
மேலும் இந்த புதிய வரிவிதிப்பு அமெரிக்காவிற்கும் சாதகமானதல்ல. ஏனெனில், இறுதியாக இந்த கூடுதல் வரியை அமெரிக்க நுகர்வோரே ஏற்க வேண்டும். இது அமெரிக்காவில் பணவீக்கத்தை அதிகரிக்கும், அங்கு உள்ள பல வல்லுநர்களும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதுபோல, உலக அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தியா எதிர்கொண்டுள்ள இந்த சவாலை, தனது பொருளாதார வலிமையையும், பிற நாடுகளுடனான உறவுகளையும் பயன்படுத்தி எதிர்கொள்ள வேண்டும். குறுகிய கால பாதிப்பு இருந்தாலும், நீண்ட காலத்திற்கு இது இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலிமையாக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
இந்தியா இந்த வரிவிதிப்பை சமாளிக்கும் மாற்று வழிகளை ஏற்படுத்திவிட்டால் டிரம்ப் தானாகவே வழிக்கு வந்து இந்தியா மீதான வரிவிதிப்பை ரத்து செய்வார். மோடி அவ்வாறு செய்ய வைத்துவிடுவார் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோடியை இதுவரை பகைத்த உள்ளூர் பிரமுகர்களும், வெளிநாட்டு பிரமுகர்களும் அவரிடம் மீண்டும் சரணடைந்த வரலாறு பல உண்டு. அந்த வரிசையில் டிரம்பும் இணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
