அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் வர்த்தக கொள்கைகளை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமானது என்றும், இந்தியா முக்கிய இறக்குமதிகளுக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்து, பிரதமர் நரேந்திர மோடி எஸ்.சி.ஓ. மாநாட்டில் உலக தலைவர்களையும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்த நேரத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் விதித்த அதிகப்படியான வரி உயர்வுகளால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மேலும் சிக்கலாகியுள்ளன.
அமெரிக்கா-இந்தியா பொருளாதார உறவு “முற்றிலும் ஒருதலைப்பட்சமான பேரழிவு” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், இது அமெரிக்க சந்தைக்கு தடையை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் வரி உயர்வை நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா கண்டித்தது. உள்நாட்டு தொழில்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நலனில் சமரசம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50% வரை வரி விதித்துள்ளது. இது அமெரிக்கா எந்த நாட்டிற்கும் விதிக்காத அதிகபட்ச வரிகளில் ஒன்று என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இரு நாடுகளும் மார்ச் மாதத்தில் தொடங்கிய வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தன. ஆனால், அமெரிக்காவின் வரி உயர்வால் ஆகஸ்ட் 25 அன்று நடைபெறவிருந்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது
அமெரிக்க அரசியல் நிபுணர்கள், “இந்தியா தனது நட்பு வட்டத்தில் இருந்து விலகி, ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாவதை, இந்தியாவை அமெரிக்கா இழந்துவிட்டது” என வருத்தம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. டிரம்பின் இந்த அதிருப்தி, வர்த்தக பேச்சுவார்த்தைகள் மட்டுமின்றி, புவிசார் அரசியல் உறவுகளிலும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து விலகுவதை சுட்டிக்காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
