கச்சா எண்ணெய் 20ஆம் நூற்றாண்டின் ‘கருப்பு தங்கம்’ என்றால், 21ஆம் நூற்றாண்டின் ‘டிஜிட்டல் வைரங்கள்’ செமிகண்டக்டர்கள் தான்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற செமிகான் இந்தியா மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா செமிகண்டக்டர் துறையில் அடைந்துள்ள வேகமான வளர்ச்சி, உலக நாடுகளின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
செமிகண்டக்டர் துறையின் உலக வல்லுநர்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளது, உலகமே இந்தியாவை நம்புகிறது என்பதற்கான சான்றாகும். உலகின் நம்பிக்கை இந்தியாவில் உள்ளது. செமிகண்டக்டர் துறையின் எதிர்காலத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்க உலகம் தயாராக உள்ளது. வளர்ந்த பாரதம் மற்றும் தற்சார்பு பாரத பயணத்தில் நீங்கள் அனைவரும் முக்கியப் பங்காளிகள்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா 7.8% பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், இந்தியா ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் விஞ்சியிருக்கிறது. உற்பத்தி, சேவை, விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி தெரிகிறது. இந்த வேகம் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது உறுதி.
21ஆம் நூற்றாண்டின் முன்னேற்றம் ஒரு சிறிய சிப்பில்தான் அடங்கியுள்ளது. இந்த சிறிய சிப், உலகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆற்றலை அளிக்க வல்லது. உலக செமிகண்டக்டர் சந்தை தற்போது 600 பில்லியன் டாலர்களை எட்டியுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இது 1 டிரில்லியன் டாலரை எட்டும். இந்த சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
2021-ல் தொடங்கப்பட்ட ‘செமிகான் இந்தியா’ திட்டத்தின் கீழ், 2023-ல் முதல் செமிகண்டக்டர் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-ல் மேலும் சில ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, 10 செமிகண்டக்டர் திட்டங்களில் 18 பில்லியன் டாலர் (சுமார் ₹1.5 லட்சம் கோடி) முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வேகம், உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
முதலீட்டாளர்களுக்கு தடையற்ற சூழலை வழங்க, ‘தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு’ போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ‘பிளக் அண்ட் பிளே’ (Plug and Play) மாதிரியில் செமிகண்டக்டர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, நிலம், மின்சாரம், துறைமுக வசதிகள், திறமையான தொழிலாளர்கள் போன்ற அனைத்துத் தேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் வெறும் ஒரு சிப் தயாரிப்போடு முடிந்துவிடாது, அது வடிவமைப்பு (designing), உற்பத்தி (manufacturing), பேக்கேஜிங் (packaging) மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் என ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை (ecosystem) உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகின் 20% செமிகண்டக்டர் வடிவமைப்பாளர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்த, ‘டிசைன்-இன்க் இன்சென்டிவ்’ (Design-Linked Incentive) திட்டம் மற்றும் ‘சிப்ஸ் டு ஸ்டார்ட்அப்’ (Chips to Startup) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எங்கள் கொள்கைகள் குறுகியகால சிக்னல்கள் அல்ல. அவை நீண்டகால அர்ப்பணிப்புகள். வடிவமைப்பு தயாராக உள்ளது. மாஸ் சீரமைக்கப்பட்டுள்ளது. இப்போது துல்லியத்துடன் செயல்படுத்தி, பெரிய அளவில் வழங்க வேண்டிய நேரம் இது. உலகமே, ‘இந்தியாவில் வடிவமைக்கப்பட்டவை’, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்று கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று மோடி முழங்கினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
