இந்தியாவுக்கு வரியா போட்ற.. அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. இனி கோலா வேண்டாம், காளிமார்க் போதும்.. அமேசான் வேண்டாம், அண்ணாச்சி கடை போதும்.. மீண்டும் ஒரு சுதேசி போராட்டம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க கூடாது என்ற அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா வலுவான பதிலடியை கொடுத்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து, மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடத்தை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளது. இந்த நடவடிக்கை,…

cola

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க கூடாது என்ற அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா வலுவான பதிலடியை கொடுத்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து, மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடத்தை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போரை, எண்ணெய் இறக்குமதி மற்றும் உள்நாட்டு புறக்கணிப்புப் போராட்டமாக மாற்றியுள்ளது.

ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதி: இந்தியாவின் நிலைப்பாடு

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பின்னர் ரஷ்யாவில் இருந்து இந்தியா நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை கூடுதலாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் சுமார் 40% ரஷ்ய எண்ணெய் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா லாபம் ஈட்டுவதாக குற்றம் சாட்டியபோது, இந்தியத் தலைவர்களும் ஆய்வாளர்களும், எரிசக்தி பாதுகாப்பு என்பது அரசியலை விட முக்கியமானது என்று வாதிடுகின்றனர். அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்வதையும் இந்தியா சுட்டிக்காட்டி வருகிறது.

அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம்

இந்த நிலையில் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரி விதித்ததற்கு பதிலடியாக, இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமெரிக்க பிராண்டுகளுக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் கோகோ-கோலா மற்றும் பிற அமெரிக்க குளிர்பானங்களுக்கு தங்கள் வளாகத்தில் தடை விதித்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ், பெப்சி, கோகோ-கோலா, கேஎஃப்சி மற்றும் மெக்டொனால்டு போன்ற அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பை அவர் “அராஜகம் மற்றும் சர்வாதிகாரம்” என்று விமர்சித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் உட்சா பட்நாயக், இந்த சூழ்நிலையை ஒரு “புதிய பொருளாதார சுதந்திரப் போராட்டம்” என்று வர்ணித்துள்ளார். உள்நாட்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பது அவசியம் என்று அவர் வாதிடுகிறார்.

இந்தக் கூட்டணிகள் வலுப்பெற்று வரும் நிலையில், புறக்கணிப்புப் போராட்டம் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

வாட்ஸ்அப், ஸ்டார்பக்ஸ், ஆப்பிள் மற்றும் டொமினோஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியுள்ளன.

கோகோ-கோலா போன்ற நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விநியோக மையங்கள் இந்தியர்களுக்கே வேலைவாய்ப்பை வழங்குகின்றன. எனவே, புறக்கணிப்பு உள்ளூர் தொழிலாளர்களுக்கும் பொருளாதார ரீதியாகப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், இந்த இயக்கம் இந்திய மக்களின் மத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவான உணர்வையும், பொருளாதாரச் சுதந்திரத்திற்கான புதிய தேடலையும் தொடங்கியுள்ளது.