7 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது முழுக்க முழுக்க பொய்.. நோபல் பரிசு என்ன, ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது.. டிரம்பின் பொய்யை புட்டு புட்டு வைத்த சர்வதேச வல்லுனர்கள்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பிறகு, “ஆறு முதல் ஏழு போர்களை” முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக…

trump2

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பிறகு, “ஆறு முதல் ஏழு போர்களை” முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அவர் 20க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார். ஆனால், இந்த கூற்றுகள் முழுக்க முழுக்க பொய் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் புட்டு புட்டு வைக்கின்றனர். அவரது ஒவ்வொரு கூற்றையும் ஆராய்ந்தபோது, ட்ரம்ப் குறிப்பிட்ட பல மோதல்கள் உண்மையில் போர்களே அல்ல, சில தீர்க்கப்படாத நிலையில் உள்ளன, மேலும் சில மோதல்களுக்கு அவரது தலையீடு மிக குறைவானது என்று கூறி வருகின்றனர்.

ட்ரம்ப் குறிப்பிட்ட முக்கிய மோதல்கள் மற்றும் அவற்றின் உண்மை நிலை என்பதை சர்வதேச வல்லுனர்கள் கூறியதை பார்ப்போம்.

1. இஸ்ரேல் மற்றும் ஈரான்:

ட்ரம்ப்பின் கூற்று: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வர தான் உதவினேன்.

உண்மை: இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தன. ட்ரம்ப் அமெரிக்க தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதையடுத்து, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில், அவர் ஒரு உண்மையான போரை முடிவுக்கு கொண்டு வர உதவியதாக நிபுணர்கள் கருதுகின்றனர், இருப்பினும் இது ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்கலாம்.

2. எத்தியோப்பியாவின் நைல் அணை:

ட்ரம்ப்பின் கூற்று: எத்தியோப்பியாவின் பிரம்மாண்டமான நைல் அணை தொடர்பான போரை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

உண்மை: இந்த அணை தொடர்பாக ஒருபோதும் போர் ஏற்பட்டதில்லை. பேச்சுவார்த்தைகள் மட்டுமே முடங்கி போயிருந்தன, அந்த பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடர்கின்றன. இது ஒரு உண்மைக்கு மாறான கூற்று.

3. இந்தியா மற்றும் பாகிஸ்தான்:

ட்ரம்ப்பின் கூற்று: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில், அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் கூறினார்.

உண்மை: டெல்லியில் உள்ள அதிகாரிகள் இந்த கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளனர். இந்த போர் நிறுத்தம் இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், ட்ரம்பின் தலையீடு இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தனர்.

4. கொசோவோ மற்றும் செர்பியா:

ட்ரம்ப்பின் கூற்று: இந்த நாடுகளுக்கு இடையேயான மோதலை தீர்ப்பதில் தனது பங்கு முக்கியமானது என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மை: இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக எந்த ஒரு வெளிப்படையான போரும் நடக்கவில்லை. அமைதி ஒப்பந்தம் பெரும்பாலும் தேக்க நிலையில்தான் இருந்தது.

5. காங்கோ மற்றும் ருவாண்டா:

ட்ரம்ப்பின் கூற்று: வாஷிங்டனில் இரு நாட்டு தலைவர்களையும் அழைத்து ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டதாக கூறினர்.

உண்மை: ஆனால் உண்மையான போராளிகளோ அல்லது கிளர்ச்சியாளர்களோ பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்றும், போர் இன்றும் தொடர்கிறது என்பது தான் உண்மை.

6. ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான்:

ட்ரம்ப்பின் கூற்று: வெள்ளை மாளிகையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உண்மை: நிபுணர்களின் கருத்துப்படி, இது ஒரு தொடக்கநிலை நடவடிக்கை மட்டுமே. இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.

7. தாய்லாந்து மற்றும் கம்போடியா:

ட்ரம்ப்பின் கூற்று: வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்திய பின்னர், இரு நாடுகளுக்கு இடையே ஒரு போர் நிறுத்தம் விரைவாக ஏற்பட்டது.

உண்மை: இந்த பதற்றத் தணிப்பில் ட்ரம்ப்பின் அழுத்தம் ஒரு காரணியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மொத்தத்தில் டொனால்ட் ட்ரம்ப் சில மோதல்களை குறைப்பதற்கும், தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம் கொடுப்பதற்கும் உதவினார் என்றாலும், அவர் குறிப்பிட்ட பல மோதல்கள் உண்மையான போர்களே அல்ல. மேலும், சில மோதல்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன என்று தெளிவாக சர்வதேச வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே, ட்ரம்ப்பின் “போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன்” என்ற கூற்று, உண்மையில் மிகைப்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை. இதனால் டிரம்புக்கு நோபல் பரிசு மட்டுமல்ல, ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது என்றே கூறப்பட்டு வருகிறது.