அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் நகரில் கொலை வழக்குகளில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனையை அமல்படுத்த போவதாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பேசிய அவர், குற்றங்களை தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் நகரில்சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறி, அங்கு நூற்றுக்கணக்கான தேசிய காவல் படையினர் மற்றும் மத்திய சட்ட அமலாக்க அதிகாரிகளை நிலைநிறுத்தியுள்ளார். இதேபோன்ற நடவடிக்கையை சிகாகோ மற்றும் பிற நகரங்களிலும் மேற்கொள்ளலாம் என அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் வாதமும் மேயரின் மறுப்பும்:
அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், “தலைநகரான வாஷிங்டன் நகரில் யாராவது ஒருவரை கொன்றால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இது ஒரு குற்றத்தடுப்பு நடவடிக்கை” என்று கூறினார்.
ஆனால், வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர், டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். 2023-ஆம் ஆண்டுக்கு பிறகு நகரில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், வன்முறை குற்றங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மரண தண்டனை பற்றிய அமெரிக்க சட்டம்:
அமெரிக்காவில் 27 மாகாணங்கள், ராணுவம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றில் மரண தண்டனை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மரண தண்டனைகள் மாகாண அளவிலேயே நிறைவேற்றப்படுகின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்டால்கூட, அது நடுவர் குழுவின் ஒப்புதலுக்கு பிறகே செயல்படுத்த முடியும். வாஷிங்டன் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்பதால் இது ஒரு சவாலாக இருக்கும்.
வாஷிங்டன் நகரில் 1972-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. 1981-இல் நகர சபையாலும் அது நீக்கப்பட்டது. 2002-இல் குடியரசு கட்சியினர் நடத்திய பொது வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையான மக்கள் மரண தண்டனைக்கு எதிராக வாக்களித்தனர்.
முந்தைய நிர்வாகத்தின் நிலைப்பாடு:
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் முதல் நாளில் மரண தண்டனையை மீண்டும் அமல்படுத்தினார். ஆனால், அவருக்கு பிறகு அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், மத்திய அரசின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் கடைசி மாதங்களில் 13 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார். இது, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு வர்த்தக போர் என்ற பெயரில் கூடுதல் வரிவிதித்து நட்பு நாடுகளை பகைத்து கொண்ட டிரம்ப், தற்போது சொந்த நாட்டு மக்கள் மத்தியிலும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் போல் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் என்று அவர் பிடிவாதமாக இருப்பதை சொந்த நாட்டு மக்களை கொல்ல டிரம்ப் முன்வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
