சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழக அரசு ஒரு மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தடங்கள் கொண்ட பறக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. தமிழக மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டத்தை தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.2,100 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இறுதி செலவுத் தொகை மாறுபடலாம்.
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால், தற்போது திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ஒரு மணி நேரம் ஆகும் பயண நேரம், 15 முதல் 20 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாறு முதல் உத்தண்டி வரை உள்ள 13 நெரிசல் மிகுந்த சந்திப்புகளை தவிர்த்து, சாலையின் மைய பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, இந்த பாலம் கட்டப்படும். இந்த சாலை 16 முதல் 20 மீட்டர் அகலத்துடன், நடைபாதைகளையும் கொண்டிருக்கும்.
இந்தப் பாலம் ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, அடையாறில் இருந்து ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் மாம்பாக்கம் போன்ற இடங்களுக்கு ஈ.சி.ஆர். வழியாக ஒரு மாற்று வழியையும் வழங்கும்.
இந்த பறக்கும் பாலம் தனியார் நிறுவனங்களின் உதவியுடன், வங்கிக் கடன்கள் மூலம் கட்டப்பட உள்ளதால், இதில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு பயண தூரத்தின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். நீலாங்கரை, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், இஞ்சம்பாக்கம், அக்கரை ஆகிய இடங்களில் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும்.
தினமும் சுமார் 70,000 வாகனங்கள் பயணிக்கும் ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஏற்கனவே பல திட்டங்கள் பரிசீலனையில் இருந்தன. தற்போது, திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 9.2 கி.மீ. ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழித்தடங்களாக அகலப்படுத்தும் பணி ஏறக்குறைய 90% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
