பெடரல் வங்கியின் முடிவுகளில் தலையிடும் டிரம்ப்.. மோசமான முன்னுதாரணம் என எச்சரிக்கை.. அமெரிக்க பொருளாதாரம் பாதித்தால் உலகிற்கே பாதிப்பு ஏற்படும்.. பொருளாதார நிபுணர்கள் கவலை..!

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொடுக்கும் அழுத்தங்கள், உலகளாவிய சந்தைகளை எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளன. ஜாக்சன் ஹோல் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி நிர்வாகிகள், பெடரல் ரிசர்வ்…

federal reserve bank

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொடுக்கும் அழுத்தங்கள், உலகளாவிய சந்தைகளை எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளன. ஜாக்சன் ஹோல் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி நிர்வாகிகள், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை பதவி நீக்கம் செய்வதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் வட்டி விகிதங்களை கடுமையாகக் குறைக்குமாறு கொடுக்கும் அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு நாட்டின் மத்திய வங்கி, அரசியல் தலையீடுகள் இல்லாமல் பொருளாதார முடிவுகளை எடுப்பது மிகவும் அவசியம். அவ்வாறு அதன் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டால், அது நிதி சந்தைகளில் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

பணவீக்கம் அதிகரிக்கும்: அரசியல் அழுத்தத்தின் காரணமாக வட்டி விகிதங்கள் முன்கூட்டியே குறைக்கப்பட்டால், அது சந்தையில் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அத்தியாவசிய பொருட்களான உணவு, எரிபொருள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும், மேலும் மக்களின் சேமிப்பு மதிப்பு குறையும்.

சந்தை நிலைத்தன்மை குறையும்: முதலீட்டாளர்கள், பெடரல் ரிசர்வ் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினால், அவர்கள் பீதியடையலாம். இது பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். ஜனவரி மாத நிலவரப்படி, வெளிநாட்டவர்கள் 8 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை வைத்துள்ளனர். இதில், மத்திய வங்கிகளே 3.8 டிரில்லியன் டாலர்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும்: அமெரிக்க டாலர் உலகளாவிய வர்த்தகத்திற்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய வங்கியின் ஸ்திரத்தன்மையில் நம்பிக்கை குறைந்தால், டாலரின் மதிப்பு குறையலாம். இது, பிற நாடுகளின் நாணயங்களை பாதிப்பதோடு, இறக்குமதியை அதிக விலையுள்ளதாகவும், அந்நிய செலாவணி விகிதங்களை கணிக்க முடியாததாகவும் மாற்றும்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர், “பெடரல் ரிசர்வ் மீது அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள், உலகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும்” என்று கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் நிலையற்றதாக மாறினால், அது அமெரிக்கர்களை மட்டும் பாதிக்காது, உலகளாவிய வட்டி விகிதங்கள் உயர்ந்து, ஓய்வூதிய நிதி மற்றும் சேமிப்புகள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.