நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல அரசியல் விமர்சகர்கள் கணிப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஜோதிடர்களும் அவரது அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜோதிட ரீதியாக விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் ஷெல்வி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதை தற்போது பார்ப்போம்.
அரசியல் எழுச்சி மற்றும் சாதகமான காலகட்டம்
ஜோதிடர் ஷெல்வி கணிப்பின்படி, நடிகர் விஜய் தமிழக அரசியலில் ஒரு முக்கியமான தலைவராக உருவெடுப்பார். கடக ராசி மற்றும் பூசம் நட்சத்திரத்தை சேர்ந்த அவருக்கு, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) அரசியல் ரீதியான எழுச்சி தொடங்கி, கார்த்திகை மாதத்தில் (நவம்பர்/டிசம்பர்) உத்வேகம் பெறும். அடுத்த ஆண்டு அவருக்கு உள்ள தடைகள் நீங்கி, அவரது அரசியல் நிலைப்பாடு வலுப்பெறும் என்றும் கணித்துள்ளார்.
வலுவான ‘சுக்கிர தசை’ மற்றும் ‘ராஜயோகம்’
தற்போது, விஜய் சுக்கிர திசையில் இருக்கிறார். இது அவரது லக்னத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு காலம். இந்த சுக்கிர திசை 2036 வரை நீடிக்கும். மேலும், அவரது ஜாதகத்தில் ‘நீசபங்க ராஜயோகம்’ என்ற அரிய மற்றும் சக்திவாய்ந்த யோகம் இருக்கிறது. இதே யோகம் பிரதமர் மோடியின் ஜாதகத்திலும் உள்ளதாக குறிப்பிடும் ஷெல்வி, இந்த யோகத்தின் காரணமாக விஜய் ஒரு “ஆட்சியாளராக” மாறுவார் என்றும், மக்களின் ஆதரவை பெறுவார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் கடக ராசிக்கு உரியவராக இருப்பதால், சுக்கிர திசையின் சாதகமான காலத்தில் கூட அவர் தனது உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பாக அவரது மனைவியுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
விஜய்க்கு கட்சிக்கு வெளியே உள்ள எதிரிகளை பெரிய சவால்கள், அவருக்கு நெருக்கமானவர்களிடம் அதாவது அவரது கட்சியினரிடம் இருந்துதான் வரும். விஜயகாந்த், தான் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு, உடல்நலம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது போல, விஜய்யும் தனது உள்வட்டத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் ‘ராகு புத்தி’ என்ற துணை காலம் அவருக்கு தேவையற்ற மன உளைச்சலையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தலாம் என்று ஷெல்வி கூறியுள்ளார்.
அரசியல் உத்தி மற்றும் கூட்டணி வியூகம்
விஜய் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும், அவர் ஒரு பெரிய கூட்டணியை நம்பி இருக்க தேவையில்லை. வெளிப்படையாக பேசாமல், அவர் அமைதியாக இருந்து செயல்படுவது ஒரு நல்ல உத்தி என்றும் ஷெல்வி தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் உள்கட்சியில் சில இடைஞ்சல்கள் இருந்தாலும், விஜய்க்கு ஆட்சியை பிடிக்கும் ஜாதகம் உள்ளது என்பதே ஷெல்வி கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
