கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்தியாவுக்கு அமெரிக்க தூதர் இல்லாமல் இருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செர்ஜியோ கோர் என்பவரை புதிய தூதராக தேர்வு செய்துள்ளார். 38 வயதான கோர், ஒரு பழமைவாத பதிப்பாளராக இருந்து வெள்ளை மாளிகையின் ஊழியராக மாறியவர். இவருக்கு ராஜதந்திர அனுபவமோ, தெற்காசியாவுடனான அதிக தொடர்புகளோ இல்லை. ஆனால், டிரம்பின் வாஷிங்டனில் மிக மதிப்புமிக்கதாக கருதப்படும் ‘விசுவாசம்’ இவரிடம் உள்ளது. எந்த அப்பாயின்மென்ட்டும் இல்லாமல் ஓவல் அலுவலகத்திற்குள் நுழையும் அளவுக்கு இவருக்கு டிரம்ப்பிடம் நெருக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த செர்ஜியோ கோர்?
செர்ஜியோ கோர் ஒரு ராஜதந்திர நிபுணர் அல்ல, மாறாக ஒரு அரசியல் செயல்பாட்டாளர். டிரம்பின் ஆதரவாளரான இவர், டிரம்ப்பின் மத்திய அரசின் நியமனங்களில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். எலான் மஸ்க் கூட இவரை “பாம்பு” என்று அழைத்திருந்தார். டிரம்ப் ஜூனியர் இவரை ஒரு நண்பர் என்று அழைக்கிறார். ஆனால் டிரம்ப்போ, “பல ஆண்டுகளாக எனது பக்கத்தில் இருந்த ஒரு சிறந்த மனிதர்” என்று இவரை புகழ்கிறார்.
இந்தியாவிற்கு இது ஏன் முக்கியமானது?
கோர், வெறும் ராஜதந்திர அறிக்கைகளை மட்டும் வாஷிங்டனுக்கு அனுப்ப மாட்டார், மாறாக நேரடியாக ஜனாதிபதியுடன் உரையாடக்கூடியவர். இது இந்தியாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். டிரம்ப்பின் மனநிலையை நேரடியாக புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாக இது இருக்கலாம்.
வர்த்தகப் போர்: டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 50% வரி விதித்துள்ளார். கோர் இந்த வர்த்தக பிரச்சினையைத் தீர்க்க உதவுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், அவருக்கு வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அனுபவம் இல்லை. ஆனால், டிரம்ப்பின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதால், அவர் ட்ரம்ப்பின் நேரடியான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பதவியில் பல பொறுப்புகள்: இந்தியாவின் கவலை
கோர் இந்தியாவிற்கான தூதர் மட்டுமல்ல, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பொருள், அவரது பணி இந்தியாவுடன் மட்டும் நிற்காது. பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் மத்திய ஆசிய குடியரசுகள் வரை அவரது அதிகாரம் விரிவடைகிறது. ஒரு நபர் பல நாடுகளுக்கான பொறுப்புகளை கொண்டிருப்பது அரிதானது. இது, வாஷிங்டனில் இந்தியாவின் குரல், மற்ற நாடுகளுடன் சேர்ந்து வலுவிழந்துவிடுமோ என்ற கவலையை டெல்லிக்கு ஏற்படுத்தியுள்ளது.
நியமனத்திற்கான காத்திருப்பு மற்றும் எதிர்கால சவால்கள்
கோர், தூதராக பொறுப்பேற்பதற்கு முன் அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கு மாதக்கணக்கில் ஆகலாம். இதற்கு முன் இருந்த தூதர் எரிக் கார்செட்டியின் நியமனம் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் தாமதமானது. எனினும், கோர் தனது சிறப்பு தூதர் பதவி மூலம் கொள்கை முடிவுகளை இப்போதே வடிவமைக்க முடியும்.
இந்தியாவை பொறுத்தவரை, கோரின் நியமனம் ஒரு வாய்ப்பும், அதே சமயம் ஒரு எச்சரிக்கையும் ஆகும். ஜனாதிபதியிடம் நேரடியாக தொடர்புகொள்ளும் ஒரு தூதர் கிடைப்பது ஒரு அரிய வாய்ப்பு. ஆனால், அவரது வெளியுறவு கொள்கை அனுபவம் சோதனை செய்யப்படாதது ஒரு எச்சரிக்கை. கோரின் வருகை, டிரம்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில், வழக்கமான ராஜதந்திரமாக இல்லாமல், தனிப்பட்ட மற்றும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த புதிய சமன்பாட்டை இந்தியா எவ்வாறு கையாளப்போகிறது என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
