மும்பையில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கனமழையால், பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், ஒரு பணியாளர் “வீட்டில் இருந்து வேலை” செய்ய அனுமதி கேட்டபோது, அதை மறுத்த மேலாளருக்கு, பெண் ஒருவர் கொடுத்த துணிச்சலான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு தனியார் நிறுவனத்தின் துணை மேலாளராக பணிபுரியும் பெண், கனமழையையும், கடுமையான வெள்ளத்தையும் கருத்தில் கொண்டு, தனது மேலாளரிடம் “வீட்டில் இருந்து வேலை” செய்ய அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அந்த மேலாளர் ஊழியரின் நிலையை புரிந்துகொள்ளாமல், “தாமதமாக வந்தாலும் சரி, அலுவலகம் வந்தே ஆக வேண்டும்” என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர், “அலுவலகம் வருவது சாத்தியமில்லை” என்று தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளித்துள்ளார். இந்த உரையாடலின் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு, இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த பதிவுக்கு இணையத்தில் பரவலாக ஆதரவு கிடைத்தது. பெரும்பாலானோர், மேலாளரின் இரக்கமற்ற போக்கை கடுமையாக விமர்சித்தனர். “மழை வெள்ளம் போன்ற நெருக்கடியான சூழ்நிலையிலும் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் மேலாளர்” என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
தனது மேலாளரின் நியாயமற்ற கோரிக்கைக்கு பணியாமல், துணிச்சலாகவும் உறுதியாகவும் பதிலளித்த அந்த பெண்ணுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்தனர். “அவருக்கு என் சல்யூட்டை தெரிவியுங்கள்”, “ஒரு உண்மையான கார்ஃப்ரேட் அதிரடி பெண்மணி” என்று பலரும் பதிவிட்டனர்.
பல தனியார் நிறுவனங்கள், இதுபோன்ற அவசர சூழ்நிலைகளில் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை அளிக்கும்போது, இந்த நிறுவனம் மட்டும் பணியாளர்கள் கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என வற்புறுத்துவது அதன் திறனற்ற பணிச்சூழலை காட்டுகிறது.
சம்பவம் குறித்து மற்ற ஊழியர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் ஒருவர், “எனது முந்தைய நிறுவனத்தில், கனமழையின் காரணமாக எனது இருசக்கர வாகனம் கிளம்பவில்லை. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கேட்டேன். ஆனால், அவரே அலுவலகத்திற்கு வராதபோதும், எனது கோரிக்கையை நிராகரித்தார். பின்னர், நான் மழை, வாகனத்தின் நிலை, மற்றும் சாலையில் உள்ள வெள்ளம் ஆகியவற்றை வீடியோவாக எடுத்து, HRக்கும், தலைமை செயல் அதிகாரிக்கும் மின்னஞ்சல் அனுப்பிய பின்னரே எனக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்த நிறுவனத்தின் மீதான தனது நம்பிக்கையை சிதைத்ததாகவும், பின்னர் பணியை விட்டு விலகியதாகவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
