அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் முக்கிய பணியாளராக இருந்த சர்கியோ கோரை, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத்தூதராகவும் நியமித்துள்ளார்.
டிரம்பின் நம்பிக்கை நட்சத்திரம்
டொனால்ட் டிரம்ப் ஜூனியருடன் இணைந்து “வின்னிங் டீம் பப்ளிஷிங்” என்ற பதிப்பகத்தை தொடங்கிய சர்கியோ கோர், டிரம்ப் குடும்பத்துடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவு கொண்டவர். அவர் டிரம்பின் இரண்டு புத்தகங்களை வெளியிடுவதை மேற்பார்வையிட்டதுடன், அவரது பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்கும் மிகப்பெரிய சூப்பர் PAC-களில் ஒன்றையும் நடத்தி வந்தார்.
ட்ரூத் சோஷியலில் இது குறித்து பதிவிட்ட டிரம்ப், “சர்கியோ ஒரு சிறந்த நண்பர், பல ஆண்டுகளாக என் பக்கத்தில் இருந்து வருகிறார். எனது வரலாற்று சிறப்புமிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் பணியாற்றினார், எனது அதிகம் விற்பனையான புத்தகங்களை வெளியிட்டார், மேலும் எங்கள் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் மிகப்பெரிய சூப்பர் PAC-களில் ஒன்றையும் நடத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், தனது கொள்கைகளை செயல்படுத்தவும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றவும் முழுமையாக நம்பக்கூடிய ஒரு நபர் தேவை என்று டிரம்ப் விளக்கினார். மேலும், கோர் ஒரு அற்புதமான தூதராக இருப்பார் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
சர்கியோ கோரின் நன்றியும் பணிப் பொறுப்புகளும்
டிரம்பின் அறிவிப்புக்கு பதிலளித்த சர்கியோ கோர், எக்ஸ் தளத்தில் தனது நன்றியை தெரிவித்தார். “இந்த நிர்வாகத்தின் சிறந்த பணியின் மூலம் அமெரிக்க மக்களுக்கு சேவை செய்வதை விட எனக்கு பெருமையானது வேறொன்றும் இல்லை!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவது தனது வாழ்நாள் கௌரவம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூதர் பதவிக்கான நியமனம் செனட் சபையால் உறுதிப்படுத்தப்படும் வரை, சர்கியோ கோர் வெள்ளை மாளிகையின் பணியாளர் இயக்குநராக தொடர்ந்து பணியாற்றுவார். இந்த நிர்வாகத்தில் அவர் ஃபெடரல் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மூத்த அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இன்னொரு முக்கிய தகவல் என்னவெனில் இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக பரிந்துரைத்துள்ள சர்கியோ கோருக்கும், டெஸ்லா நிறுவனரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே பல மாதங்களாகவே மோதல்கள் இருந்து வந்துள்ளன. இந்த மோதல்கள்தான் எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகியதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் மற்றும் சர்கியோ கோர் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணம், நாசா தலைவர் நியமனம் குறித்த சர்ச்சையே. எலான் மஸ்க்கின் நம்பிக்கைக்குரிய நண்பரான ஜேரெட் ஐசக்மேனை நாசாவின் தலைவராக டிரம்ப் பரிந்துரைத்தார். ஆனால், இந்த பரிந்துரை, இறுதி ஒப்புதலுக்கு முன்பாகவே திடீரென வாபஸ் பெறப்பட்டது.
இதற்குக் காரணம், சர்கியோ கோர் தான். ஜேரெட் ஐசக்மேன் கடந்த காலத்தில் ஜனநாயக கட்சிக்கு நன்கொடைகள் வழங்கிய விவரங்கள் அடங்கிய ஒரு ஆதாரத்தை டிரம்ப்பிடம் அளித்ததே என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள்தான், ஐசக்மேன் நியமனம் வாபஸ் பெறப்பட காரணம் எனக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு எலான் மஸ்க்கிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு மேலும் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
