மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்களின் திரட்சியும், கட்சியின் தலைவர் விஜய்யின் ஆவேசமான உரையும்தான் இந்த அரசியல் மாற்றத்திற்கான முதல் அடியாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் தாக்கம் அடங்குவதற்குள்ளாகவே, அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஒன்று கிளம்பியுள்ளது. நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவிருப்பதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
விஜய் மாநாட்டின் வெற்றி, அகில இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, டெல்லி அரசியல் வட்டாரத்தில், த.வெ.க.வின் எழுச்சி ஒரு புதிய சக்தியாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை நேரில் பார்த்தறிந்த காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர், உடனே ராகுல் காந்தியிடம் இதுபற்றி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவ போவதில்லை. தமிழகத்தில் தி.மு.க.வின் நிழலில் இருந்து விலகி, காங்கிரஸ் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டுமென்றால், வலுவான ஒரு புதிய கூட்டணியை நாட வேண்டும். அதற்கு நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்று அந்த தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸுக்கு ஏன் இந்த ஆர்வம்?
பல ஆண்டுகளாக, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் ஒரு துணைக்கட்சியாகவே இருந்து வருகிறது. தி.மு.க.வின் தயவிலேயே காங்கிரஸ் இயங்குவது கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக காங்கிரஸுக்குள் பல காலமாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்த சூழலில், விஜய்யின் வருகை காங்கிரஸுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. விஜய்யின் அரசியல் நுழைவு, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் எதிராக, ஒரு மாற்று சக்தியாக வளர அவருக்கு உதவும் என்று காங்கிரஸ் கருதுகிறது. விஜய்யின் இளைய தலைமுறை வாக்கு வங்கி, சினிமா கவர்ச்சி, மற்றும் அவரது ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை காங்கிரஸ் ஒரு புதிய கூட்டணியின் அச்சாணியாக பார்க்கிறது.
தேசிய அளவில் ஒரு கட்சியின் தலைவருடன் சந்திப்பு நடப்பது, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு, ‘விஜய் தனி ஆள் அல்ல, அவரை நாடும் சக்திகள் உள்ளன’ என்ற செய்தியை தெரிவிக்கும்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஜய் – ராகுல் சந்திப்பு, உடனடியாக நடக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் விரைவில் இந்த சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளதாகவும், அப்போதுதான் இரு கட்சிகளும் ஒரு சுமூகமான அரசியல் உறவை ஏற்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்ததில் இருந்து, தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது. இப்போது ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்த இந்த தகவல், இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில், தமிழக அரசியல் களம் ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
