அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அதிக விதித்துள்ளதால் அதன் சுமை அமெரிக்க மக்கள் தலையில் விழுந்துள்ள நிலையில் தற்போது புதிதாக எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான 50% வரியை விரிவுபடுத்தியுள்ளார். இதன் காரணமாக, பல நூற்றுக்கணக்கான அன்றாட பொருட்களின் விலை அமெரிக்காவில் கணிசமாக உயரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்த ஆத்திரம் புரட்சியாக வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம் முதலில் கச்சா எஃகு மற்றும் அலுமினியத்திற்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்த வரியை, இப்போது அந்த உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதனால், பட்டர் கத்தி, குழந்தைகளுக்கான தள்ளுவண்டி, ஸ்பிரே டியோடரண்ட், ஃபர்னிச்சர் போன்ற அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் முதல், விண்வெளி ஆய்வு கருவிகள், காற்றாலைகள், புல்டோசர்கள், கிரேன்கள் போன்ற தொழில்துறை உபகரணங்கள் வரை அனைத்தும் விலை உயர்வை சந்திக்கும்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த வரிகள், ஏற்கனவே உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். Procter & Gamble, Nike, Best Buy, Adidas, Walmart போன்ற பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் பொருட்களின் விலையை உயர்த்தவிருப்பதாகவோ அல்லது உயர்த்திவிட்டதாகவோ அறிவித்துள்ளன. இது அமெரிக்க மக்களின் வாழ்க்கை தரத்தை நேரடியாகப் பாதிக்கும்.
டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் தங்கள் விலைகளை குறைத்து, இந்த வரியை சரிக்கட்டுவார்கள் என்றும், அதனால் அமெரிக்கர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் வாதிடுகிறது. ஆனால், புள்ளிவிவரங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களின் விலை குறைவதற்கு பதிலாக, உயர்ந்துள்ளது. இது, ஏற்றுமதியாளர்கள் இந்த வரிச்சுமையை ஏற்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இதன்மூலம், இந்த வரிகளால் ஏற்படும் கூடுதல் செலவை அமெரிக்க நிறுவனங்களும், இறுதியில் நுகர்வோருமே சுமக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
