அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவிடம் ரஷ்யாவின் மலிவான கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு, அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெயை வாங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், அதன் விலை அதிகம் என்பதால் பல நாடுகள் அதை தவிர்த்து வருகின்றன. இந்த சூழலில், “ரஷ்யாவின் எண்ணெயை விடுத்து அமெரிக்க எண்ணெயை வாங்குங்கள்” என்று டிரம்ப் நேரடியாக சீனாவை கேட்டுக்கொண்டார். ஆனால், சீனா இதற்கு மிகத் தெளிவாக “முடியாது” என்று பதிலளித்துள்ளது.
ட்ரம்பின் திட்டம் தோல்வியடைந்ததன் காரணம்
சீனா போன்ற நாடுகளுக்கு எண்ணெய் விற்பதன் மூலம் 100 பில்லியன் டாலர்களை திரட்ட டிரம்ப் திட்டமிட்டார். ஆனால், சீனா இதற்கு ஒத்துழைக்காததால், அமெரிக்காவின் இந்த முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து சீனா எண்ணெய் வாங்குவதை தடுக்கும் அமெரிக்காவின் முதல் முயற்சியே இது.
அமெரிக்கா, சீனாவை நேரடியாக விமர்சிப்பதன் மூலமோ அல்லது மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியும் என்று நம்பியது. ஆனால், சீனா இதை ஏற்கவில்லை. எரிபொருள் வர்த்தகம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என்றும், அதில் அரசியல் தலையீடு ஏற்கத்தக்கதல்ல என்றும் சீனா உறுதியாக தெரிவித்துள்ளது.
எண்ணெய் வர்த்தகத்தின் உண்மையான நிலவரம்
2024-ஆம் ஆண்டில், சீனா 108 மில்லியன் டன்னுக்கும் அதிகமான ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் கால் பகுதி ஆகும். இவ்வளவு பெரிய அளவிலான வர்த்தகத்தை ஒரே இரவில் அமெரிக்க எண்ணெயால் மாற்றுவது என்பது சாத்தியமற்றது.
ரஷ்யா மற்றும் ஈரானின் எண்ணெய் விலை மலிவானது. அவை ஆசிய நாடுகளுக்கு மிக அருகில் இருப்பதால், கப்பல் போக்குவரத்துக்கான செலவு மற்றும் நேரம் குறைவாக உள்ளது. இதனால், அமெரிக்க எண்ணெயுடன் ஒப்பிடும்போது, ரஷ்ய எண்ணெயை தேர்ந்தெடுப்பது ஆசிய நாடுகளுக்கு லாபகரமானது. பொருளாதார ரீதியாக இதுவே சரியான முடிவு என்பதால், சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்த மோதல், அமெரிக்காவின் அழுத்தங்கள் உலக நாடுகளிடையே எவ்வாறு எடுபடாமல் போகின்றன என்பதையும், உலகப் பொருளாதாரத்தில் அதிகார சமநிலை மாறி வருகிறது என்பதையும் தெளிவாக காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
